மகள் எட்டாம் வகுப்பு: அப்பா பத்தாம் வகுப்பு!: பா.ஜ.க. பிரமுகரின் பலே வேலை!

பா.ஜ.க. பிரமுகர் செய்த ஒரு காரியம் திருப்பூர் பகுதியில் அனைவராலும் பிரமிப்பாக பார்க்கப்படுகிறது.

விசயம் இதுதான்..

திருப்பூரைச் சேர்ந்தவர் சரவண பிரகாஷ்.  ஒளிப்பட நிலையம் நடத்தி வரும் இவர், சமூகப் பணிகளில் ஆர்வம் உள்ளவர். ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் அண்ணாமலை முன், அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு, திருப்பூர் வடக்கு மாவட்ட  பா.ஜ.க. ஊடக செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

”சரி, அப்படி என்ன செய்தார் இவர்?” என்கிறீர்களா?

1995ம் ஆண்டு வாக்கில் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் விட்ட இவர், இருபத்தியைந்து வருடங்களுக்கு பின், தேர்வு எழுதி இருக்கிறார்!

கால்நூற்றாண்டு கடந்து 41 வயதில் மீண்டும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு கட்டணம் செலுத்தி, தனித்தேர்வராக எழுதிய இவர், முதல் முயற்சியிலேயே கணக்கை தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்! மொத்த மதிப்பெண்கள் மதிப்பெண்கள் 215!

அண்ணாமலை முன் பா.ஜ.க.வில் இணைந்த சரவண பிரகாஷ்

இது குறித்து இவர் தனது முகநூல் பக்கத்தில், “புத்தகத்தை கண்ணில் கூட பார்க்காமல்,  ஒரு பாடத்தையும் படிக்காமல், எப்படி இத்தனை மார்க் வந்தது என
தயவு செய்து யாரும் ஆர்பாட்டம் போராட்டம் என இறங்கிவிடவேண்டாம்!”  என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு சான்றிதழ்

சரவணபிரகாசை தொடர்புகொண்டு பேசினோம். சீரியஸாக பேசிய அவர், “சிறு வயதில் இருந்தே படிப்பில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் சூழ்நிலை காரணமாக, பத்தாம் வகுப்பில் பாதியோடு படிப்பு நின்றது.  ஒளிப்பட நிலையம் வைத்து நடத்தி வருகிறேன். ஆனாலும் அரசியல், வரலாறு குறித்து புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பேன்.  அதோடு பாட புத்தகங்கள் கண்ணில் பட்டால் அவற்றையும் புரட்டுவது உண்டு.

இந்த நிலையில்தான், ‘பாதியில் விட்ட பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினால் என்ன’  என்று தோன்றியது. உடனடியாக கட்டணத்தை செலுத்தினேன்.

கடையை நிர்வகிப்பது, பொது வேலைகள் என  அலைவதால் படிக்க நேரம் கிடைக்காத சூழல்தான்.  ஆனாலும்  என் அறிவுக்கு எட்டியவரை எழுதினேன்! கணக்கை தவிர மீதி பாடங்களில் வெற்றி பெற்றுவிட்டேன்!” என்கிறார்.

இவரது மகள் வானதி எட்டாம் வகுப்பு படிக்கிறார்; மகன் தமிழ்க்குமரன் மூன்றாவது படிக்கிறார்.

“மகள் எட்டாம் வகுப்பு.. நீங்கள் பத்தாம் வகுப்பா.. என்று சிலர் கிண்டலாக பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. படிப்பதற்கு வயது ஏது?” என்கிறார் சரவண பிரகாஷ்.

ராம.சுப்ரமணியன்

இது குறித்து,  ‘கல்வி டுடே’ இதழாசிரியரும் சமூக ஆர்வலருமான  ராம.சுப்ரமணியன்,  “சரவணபிராகாஷ் அவர்களின் செயல், ஒரு சிறந்த முயற்சி. கால் நூற்றாண்டுக்குப் பிறகு படிப்பைத் தொடர அவர் நினைத்ததே வெற்றிதான். படிப்பு என்பதை வேலை சம்பந்தப்பட்டதாக பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. படிப்பு என்பது நம்மை நாமே வளர்த்துக்கொள்ள உதவும் ஒரு கருவி. இதற்கு கால, நேரம், வயது எதுவும் கிடையாது.

கடை நிர்வாகம், பொது வேலை, குடும்பத்தை கவனிப்பது என பிஸியாக இருக்கும் ஒருவர் தேர்வு எழுதியிருப்பதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!” என்றார்.

மேலும் இவர், “தோல்வி அடைந்த பாடத்தை எழுதி தேர்ச்சி பெறுவதோடு, அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதப்போகிறேன். பிறகு இளங்கலை, அரசியல் அறிவியல் ( பொலிடிகல் சயின்ஸ்) படித்து, அதில் முதுகலையும் படித்து, பி.ஹெச்டி முடி்தது டாக்டர் பட்டம் பெற வேண்டும்!” என்கிறார்.

வருங்கால டாக்டர்  சரவண பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Related Posts