‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ : ஆவணப்படம் எப்படி உள்ளது?
இன்று தமிழ்த் திரையுலகில், லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் நயன்தாராவை பற்றிய ஆவணப்படமான, ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond the Fairytale) நெட்ஃபிளிக்ஸில் ஓ.டி.டி.யில் வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் சிறு வயது உருவங்கள் பேச… ஆவணப்படம் துவங்குகிறது. ஆம்.. ஆரம்பரமே ரசிக்கவைக்கிறது.
அடுத்து ‘மனசின்னகரே’ படத்தில் தொடங்கி ‘ஜவான்’ வரையிலான நயன்தாராவின் திரை வாழ்க்கையை விறுவிறு என சொல்கிறது.
திரைப்பட பரமபதத்தில் ஆரம்பத்தில் இருந்தே நயனுக்கு ஏணிகளுக்கு குறைச்சல் இல்லை. தன்னுடைய முதல் ஆறு படங்களில் ஜெயராம், சரத்குமார், மோகன்லால், மம்முட்டி, ரஜினிகாந்த் என, ஸ்டார்களுக்கு ஜோடியாக தோன்றி இருக்கிறார் என்பதைச் சொல்கிறது ஆவணப்படம்.
அதோடு, கஜினி படத்தின் மூலம் பாடி ஷேமிங்கிற்கு ஆளானது, பில்லா படத்தில், பிகினி உடையில் தோன்றியது போன்றவற்றையும் இந்த படம் பேசுகிறது.
‘மனசின்னகரே’ என்ற மலையாள படத்தில் நயன்தாராவை அறிமுகப்படுத்திய இயக்குநர் சத்தியன் அந்திகாட், ஐயா திரைப்படத்தின் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, மற்றும் இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், அட்லி, நெல்சன், நடிகர்கள் நாகார்ஜுனா, ராணா டகுபதி, விஜய் சேதுபதி, உபேந்திரா, ஆடை வடிவமைப்பாளர் அனு வர்தன், நடிகைகள் பார்வதி, ராதிகா, தமன்னா போன்ற பிரபலங்கள் நயன்தாரா பற்றி தங்கள் பார்வைைச் சொல்கின்றனர்.
“திரையுலகில் ஹீரோக்களுக்குத்தான் நட்சத்திர அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைப்பதுதான் விதியாக இருந்தது. இதை மாற்றியவர் நயன்தாரா” என்கிற முக்கியமான விசயத்தைச் சொல்கிறார் ராதிகா. அதோடு, நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில் நயனுக்கும் விக்னேஸுக்கும் காதல் அரும்பியது… அது தனக்குத் தெரியாமல் போனது… இதை ( படத்தின் தயாரிப்பாளர்) நடிகர் தனுஸ் சொல்லி தன்னைத் திட்டியது… ஆகியவற்றையும் சொல்லி இருக்கிறார் ராதிகா.
பிரபுதேவா பெயரைச் சொல்லாமல், அவருக்காக திரையுலகை விட்டு விலக முடிவெடுத்த சூழலைச் சொல்கிறார் நயன்தாரா. மற்றபடி, தோல்வியுற்ற தனது காதல் உறவுகளைப் பற்றி அதிகம் பேசவில்லை.
சர்ச்சைக்குரிய 3 வினாடி நானும் ரவுடிதான் பட வீடியோ துணுக்கு இடம்பெற்றிருக்கிறது. ’இதுக்காப்பா இவ்ளோ சண்ட” என்று தோன்றுகிறது.
விக்கி – நயன் காதல் என்றவுடன் சுவாரஸ்யமான சம்பவங்களைத்தான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். அப்படி ஏதும் இல்லை. அதே போல, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருமண காட்சிகளும் அதிகம் இம்பெறவில்லை. ரஜினிகாந்த், ஷாருக்கான், ஏ.ஆர். ரஹ்மான், சூர்யா – ஜோதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களது வாழ்த்துகளைச் சேர்த்திருக்கலாம்.
எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது திறமையால் எப்படி லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார் என்பதைச் சொல்கிறது இந்த ஆவணப்படம். ஆனால் இதைவிட அதிகமான தகவல்கள் ( நயன்தாராவைப் பற்றி) அனைவருக்கும் தெரியும்.

