‘சார்’: திரைப்பட விமர்சனம்
‘கல்வியை தடுப்பது எந்த ஆ’சாமி’யானாலும் விடேன்’ என்கிற, ஈ.வெ.ராமசாமியின் கருத்தை கமர்சியல் சினிமாவாக சொல்லும் படம், ‘சார்’.
1950ம் ஆண்டு காலகட்டம்… சிறிய கிராமம்…
தாழ்த்தப்பட்ட மக்கள், படித்துவிட்டால், அவர்களை அடக்கி ஆள முடியாது என்று, அவர்களுக்கு கல்வி கிடைப்பதை தொடர்ந்து தடை செய்து வருகிறது ஆதிக்க சாதி குடும்பம் ஒன்று. இதை எதிர்த்து, அரசுப் பள்ளியைக் கொண்டு வந்து அனைவருக்கும் கல்வி கிடைக்க வழி செய்கிறார் நல்லாசிரியர் ஒருவர். இது அங்கிருக்கும் ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. அந்த நல்லாசிரியருக்கு மனநோயாளி என்று முத்திரை குத்தி ஒடுக்கிவைக்கிறார்கள்.
இது மூன்றாம் தலைமுறையிலும் தொடர்கிறது. தாத்தா, அப்பாவின் வழியில் ஆசிரியர் ஞானம் வருகிறார். அப்போதும் பள்ளியை இடிக்க ஆதிக்க சாதியினர் திட்டமிடுகின்றனர். எதிர்த்துப் போராடுகிறார்.
இவருக்கும் மனநலம் சரியில்லை என்று முத்திரை குத்துகிறார்கள். இதற்கிடையே ஊர்க்குளத்தில் அவ்வப்போது பிணங்கள் மிதக்கின்றன.
இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.
‘ஞானம்’ என்கிற ஆசிரியராக விமல்… ஆரம்பத்தில் ஜாலியான இளைஞனாக வருகிறார். எட்டு மணி வரை தூங்கும் அவர், காதலியைச் சந்திக்க நான்கு மணிக்கு குளத்துக்குச் சென்று குளித்து.. அதனால் ஜூரம் வந்து நடுங்கும் காட்சியில் சிரிக்க வைக்கிறார்.
‘யாரோ அடிக்கிறாங்க…’ என்று கதறும் இடத்திலும், ஆக்ரோசமான இறுதி காட்சியிலும் கூடுதலாக கவனம் ஈர்க்கிறார்.

ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்வது, தன்னைப்போலவே மகனும் நல்லாசிரியராக இருந்து பள்ளியைக் காக்க வேண்டும், அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்று விரும்புவது, ஓய்வு பெற்றதை மறந்து பள்ளிக்குச் செல்வது, எதிரிகளின் சதியில் சிக்கி உயிர் தப்பி, தன்னைத்தானே சங்கிலியால் கட்டிக்கொண்டு முடங்குவது… கலங்க வைத்து விடுகிறார் ‘சித்தப்பு’ சரவணன். இல்லை… இனி, ‘சார்’ சரவணன்.
நாயகி சாரதா தேவிக்கு அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. கிடைத்த காட்சிகளில் இயல்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.விமலின் சேட்டைகளை மறைமுகமாக ரசிக்கும் காட்சியில் கவர்கிறார்.. வில்லனிடம் சிக்கும் காட்சியில் பரிதாபப்பட வைக்கிறார்.
சிராஜூவின் பாத்திரப்படைப்பு சிறப்பு. அதை உணர்ந்து நடிக்க முயற்சித்து இருக்கிறார். நட்பு முகம் காட்டி, பிறகு உண்மை சொரூபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அதிர வைக்கிறார்.
ஜெயபாலன், எலிசபெத் உள்ளிட்டோர் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
சிறுவன் ஞானம், “மண்டைக்குள் பூச்சி பறக்குது” என்றும் இன்னொரு சிறுவவன், “நள தமயந்தி” என்றும் பெரிய மனுச பேச்சு பேசுவது ஒன்றவில்லை. ‘வேப்பமரத்தடியில படுத்தா புத்தி வளரும்.. புளிய மரத்தடியில படுத்தா சக்தியா வரும்’ என்பது மாதிரியான வசனங்களை நீக்கி இருக்கலாம்.
கிராமம், பள்ளி என சில லோகேசன்கள்தான்.தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை, அயர்ச்சி ஏற்படுத்தாமல் பல்வேறு கோணங்களில் படம்பிடித்து, கதைக்குத் தேவையான ஒளியுணர்வை அழுத்தமான ப்ரேம்களால் நிரப்பியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரீஷ்.
சிந்து குமார் இசையில், ‘படிச்சிக்கிறேன்..’ பாடல் சிந்திக்க மட்டுமின்றி நெகிழவும் வைக்கிறது. இந்தப் பாடலை அனைத்து திரையரங்குகளிலும் அனைத்து படங்களுக்கும் முன், திரையிடலாம்.
அனைவருக்கும் கல்வி- அதுவும் அரசு அளிக்கும் கல்வி என்கிற உன்னத நோக்கத்தை வலியுறுத்தும் கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குநர் போஸ் வெங்கட்டை பாராட்டலாம்.
‘எதார்த்தமாக’ வில்லனத்தனங்கள் செய்தே, ஒருவருக்கு மனநோயாளி பட்டம் கட்டிவிட முடியும் என்பதை காண்பித்த விதம் பகீர்.
கல்விக்கு எதிரான கதாபாத்திரத்துக்கு சாமி என்றும், அதை ‘சம்ஹாரம்’ செய்யும் கதாபாத்திரத்துக்கு ஞானம் என்றும் பெயர் வைத்தது, ‘நான் அண்ணாதுரை பேரன்டா’ என்று அழுத்தம் திருத்தமாக சில முறை வரும் வசனம்… இவை இயக்குநரின் நேர்மையையும், துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது.
ஒரு காட்சியில், ‘பேச்சு வழக்கற்ற மொழி சமஸ்கிருதம்’ என்று கரும்பலகையில் இருப்பதை டீசரில் பார்க்க முடிந்தது. சென்சார் கட் செய்துவிட்டது.
ஆனாலும் எதார்த்தத்தை -உண்மையைச் சொல்ல முயன்ற இயக்குநருக்கு பாராட்டுகள்.
மகன் ஞானம் காதலிப்பதை அறியாமலேயா அவரது தந்தை வீட்டில் இருக்கிறார்? தவிர, காதலித்தால் பொது நோக்கம் கெட்டுவிடுமா என்ன? ஏன் எதிர்க்கிறார்?
மூன்று தலைமுறையாக கல்விப்பணி செய்வோருக்கு அவர்களால் பயன்பெற்ற யாரும் உடன் வந்து நிற்கவில்லையா? அதாவது, ஊரார் சேர்ந்து இழுக்க வேண்டிய கல்வித்தேரை, அத்தனை பிரயாசைப்பட்டு ஒற்றை ஆளாய் நாயகன் விமல் இழுக்க வேண்டுமா? கமர்சியல் எனஅற பெயரில், குத்தாட்டம் தேவையா?
இயல்பான, ‘கன்னிமாடம்’ படத்தை அளித்து ஈர்த்த, போஸ் வெங்கட்தான் இயக்குநரா இந்தப் படத்துக்கு?
இப்படி சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
ஆனாலும், இந்தக் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு படத்தை பார்க்கலாம்.
காரணம்…
கல்வியின் அவசியத்தை, சாதி ஆபத்தை, கடவுள் என்கிற புனைவை… மிக தைரியமாக மக்களுக்குச் சொல்ல முற்பட்டிருக்கிறது திரைப்படம்!
– டி.வி.சோமு

