‘யாத்திசை’ திரைப்பட இயக்குநர் தரணி ராஜேந்திரன் திருமணம்!

‘யாத்திசை’ திரைப்பட இயக்குநர் தரணி ராஜேந்திரன் திருமணம்!

கவனத்தை ஈர்த்த ‘யாத்திசை’ திரைப்பட இயக்குநர் தரணி ராஜேந்திரனுக்கும், இரா.சிவரஞ்சினிக்கும் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி சென்னையில் திருமணம் நடக்க உள்ளது.

நவீன ஓவியர் வீரசந்தானத்தை, கதையின் நாயகனாகக் கொண்டு ‘ஞானச்செருக்கு’ என்கிற படத்தை எழுதி, இயக்கியவர் தரணி ராஜேந்திரன். அப்படம், பன்னாட்டு திரைப்பட விழாக்களில்  விருதுகளையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

அடுத்து தரணி ராசேந்திரன் இயக்கிய ‘யாத்திசை’ திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நடப்பதாக கதைக்களம் அமைந்தது. தென்னகம் வென்று ஆட்சி செய்த ரணதீரப் பாண்டியன் வரலாற்றுடன் புனைவை இணைத்து உருவான அசாதாரண முயற்சி இது. அக்காலகட்ட ஆடை, ஆபரணங்கள் மட்டுமின்றி, அக்காலத்தில் பேசப்பட்ட தமிழ் உச்சரிப்புகளையே பயன்படுத்தி உருவான திரைப்பபடமாக இது அமைந்தது.

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன், பல்வேறு விருதுகளும் பெற்றது. சமீபத்தில் விகடன் நிறுவனமும், விருது வழங்கி கவுரவித்தது.

தற்போது, தனது அடுத்த படைப்படை உருவாக்கும் பணியில் இருக்கிறார்,  இயக்குநர் தரணி ராசேந்திரன்.

இந்நிலையில் அவருக்கும், இரா.சிவரஞ்சினிக்கும் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி இரு வீட்டார் ஆசியுடன் சென்னை கானாத்தூரில் உள்ள ஹிரு மகிழ்விடத்தில் (HIRU RESORT) திருமணம் நடக்க உள்ளது.

விழுப்புரத்தில் வசிக்கும் கோ.ராமஜெயம் – சிவகாமி தம்பதியின் மகளான, மணமகள் இரா.சிவரஞ்சினி, சென்னையில் அரசுடமை வங்கி ஒன்றில்  பணியாற்றுகிறார்.

எல்லா வளமும் பெற்று மணமக்கள் நீடு வாழ வாழ்த்துவோம்!

Related Posts