பேச்சி திரை விமர்சனம்
மலையேற்றத்தில் விருப்பம் கொண்ட ஐந்து பேர் நண்பர்கள் குழு, கொல்லிமலைக்கு வருகிறது. அவர்களுக்கு வழிகாட்டியாக அமைகிறார், வனத்துறை ஊழியர் பால சரவணன்.
வனப்பகுதியில் உள்ள சில இடங்களை சுட்டிக்காட்டி, அவை ஆபத்தான பகுதிகள்.. அங்கே செல்ல வேண்டாம் என்கிறார். ஆனால் வந்திருந்த ஐவரும், அப்பகுதிக்குள் அதிரடியாக புகுந்துவிட.. தொடர்ந்து பல அமானுஷ்ய – அதி பயங்கர சம்பவங்கள் நடக்கின்றன.
ஐவரின் நிலை என்ன ஆனது… அந்த அமானுஷ்ய சம்பவங்களுக்குக் காரணம் என்பதை விவரிப்பதுதான் பேச்சி திரைப்படம்.
காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும்தான் டிரெக்கிங் செல்லும் நண்பர்களாக நடித்து உள்ளனர். இந்தக் கால இளசுகளின் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், ஈகோவை கண்முன் நிறுத்துகின்றனர்.
அதே போல சாத்தான் சக்தியிடம் சிக்கி அலறுவதும், பயந்து ஓடுவதும் என நம்மையும் பயமுறுத்துகின்றனர்.
பல படங்களில் நாயகனுக்கு நண்பனாகவே வந்துகொண்டிருந்த பால சரவணன் இந்த படத்தில் நாயகனாக உயர்ந்திருக்கிறார். வனத்துறை கடை நிலை ஊழியர் கதாபாத்திரம். வழக்கம் போலவே தனது பாத்திரம் அறிந்து சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.
டிரக்கிங் குழுவை எச்சரிப்பது, பேச்சி குறித்து விவரிப்பது, அந்த ஐவரை காப்பாற்ற முயல்வது என இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார் பால சரவணன்.
அவருக்காக காத்திருக்கும் அவரது மகளின் முகமும் நமது மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறது.
திகில் படத்துக்கு ஏற்ற மங்கலான ஒளிப்பதிவு இன்னும் பயத்தை அதிகரிக்கிறது. அடந்த வனப்பகுதியை ஏரியல் வியூவில் காண்பிப்பது, அந்த மர்ம வீடு என சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பார்த்திபன்.
ராஜேஷ் முருகேசனின் இசை படத்துக்கு பலம். திகில் காட்சிகளை மேலும் திகிலாக்குகிறது இவரது இசை. இக்னேசியஸ் அஸ்வினின் படத்தொகப்பும் சிறப்பு.
வழக்கமாக பேய்வீடு என்றால் பிரம்மாண்டமான பங்களாவாக இருக்கும். ஆனால் இதில் சிறிய வீடுதான். இருந்தும் மிரட்டுகிறது… கலை இயக்குநர் குமார் ஞானப்பனுக்கு பாராட்டுகள்.
பொதுவாக பேய்கள், நடை டூட்டிதான் பார்க்கும். ஆனால் பேச்சி, பகலில் வெறிகொண்டு அலைகிறது. இரவு நேர பயத்தை, பகலிலேயே அளித்திருக்கிறது இயக்குநர் ராமச்சந்திரன் பி.யின் சிறப்பான திரைக்கதை.
அடர்ந்த வனப்பகுதிக்குள் முதல் ஜோடி நுழைவதில் இருந்து, கிளைமாக்ஸ் வரை திக் திக் அனுபவத்தை அளித்து இருக்கிறது திரைப்படம்.
மிரள வைக்கும் பேச்சியை, ரசிக்கலாம்.

