விமர்சனம்: லவ்வர்
காதலர்களுக்குள் இருக்கும் ஈகோ… இல்லை இல்லை.. காதலன்களுக்கு இருக்கும் ஈகோ – ஆணாதிக்கத்தை முகத்தில் அறைந்தமாதிரி சொல்லி இருக்கும் படம்.
அருண் – திவ்யா காதலர்கள். அருணுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. தவிர, சொந்தமாக பிஸினஸ் செய்கிறேன் பேர்வழி என்று தனது அம்மாவின் பணத்தை அழித்துவிடுகிறார். வேறு இடத்தில் வேலைக்குப் போகவும் ஈகோ தடுக்கிறது.
திவ்யா, ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவரை, தான் சொல்கிறபடிதான் நடக்க வேண்டும் என ஆணாதிக்கம் செலுத்துகிறார் அருண்.
இதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினையை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் அருணாக மணிகண்டன் நடித்து இருக்கிறார். ஈகோ – ஆணாதிக்கம் பிடித்த இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். “அவ என் காதலி இல்லே.. என் பொண்டாட்டி… அவ எப்படி இன்னொருத்தன்கூட அதிக நேரம் பேசலாம்” என்றெல்லாம் அவர் வெடிக்கும்போது, அச்சு அசலாக ஆணாதிக்க ஆணை வெளிப்படுத்துகிறார்.
நாயகி திவ்யாவாக, ஸ்ரீகெளரி பிரியா நடித்துள்ளார். சிறப்பாக நடித்து உள்ளார். காதலன் மீது வைக்கும் அன்பு, அதே நேரம் அவனது அடக்குமுறை பிடிக்காத நிலை, அவனை நினைத்து தவிப்பது என பரிதாபத்துக்குரிய இளம்பெண்ணாக வாழ்ந்து இருக்கிறார்.
நாயகனின் தாயாக வரும் கீதா கைலாசம், அப்பாவித் தாயாக நடித்துள்ளார். கண்ணா ரவி, சரவணன், கீதா உள்ளிட்டோரும் அவரவர் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே படத்துக்கு பலம்.
ஒரு பெண்ணை காதலிக்க பலவித சாகசங்கள் செய்து கவர்வது.. அவளும் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டால் அடக்குமுறை செய்வது என்கிற பெரும்பாலான இளைஞர்களின் மனநிலையை விளாசி இருக்கிறது திரைப்படம். காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ பிரச்சினை, அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை எப்படி காரணமாக அமைகிறது என்பதை வைக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.
இதற்கு ஒரு உதாரணம், பிக்னிக் போகும் சீன். அப்போது நாயகன், “உன் ஆளை எங்க வேணா ஜாலியா போக விடுறப்போல” என கேட்க அதற்கு நண்பர், “ அவங்களோட ஃப்ரீடம்ல தலையிட நாம யாரு” என்று நச்சென பதில் அளிக்கும் இடத்தைச் சொல்லலாம்.
இயல்பான திரைக்கதை ஓட்டம், இடைவேளை மற்றும் கிளைமைக்ஸில் வைத்துள்ள அதிரடி காட்சி என படம் சுவாரஸ்யமாக செல்கிறது.
