‘ராட்சசன்’ பட சரவணன் போல் நாடகமாடியவர் கைது!

‘ராட்சசன்’ பட சரவணன் போல் நாடகமாடியவர் கைது!

ராம்குமார் இயக்கத்தில் 2018ல் வெளியான ஹிட் திரைப்படம், ராட்சசன். விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த இப்படத்தில்,  வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் நடுங்க வைத்தது.

இறந்துபோன தாயைப் போல வேடம் அணிந்து கொலைகளைச் செய்யும் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவனத்தை ஈர்த்தவர் சரவணன்.

அதே போன்ற ஒரு ஆள் மாறாட்டம் இத்தாலியில் நடந்து இருக்கிறது. இறந்த தனது தாயாரின் ஓய்வூதிய பணத்தை பெறிவதற்காக அவரைப் போல வேடமிட்டு சென்ற மகன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி நாட்டில் பிரபலமான நகரம் மான்டுவா. இதன் அருகிலுள்ளது போர்கோ விர்ஜிலியோ என்ற பகுதி. இங்கு, தனது தாயாருடன் இளைஞர் ஒருவர் வசித்து வந்தார். அந்த நபரின் தாயார் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த பெண்மணி இயற்கையான முறையில் உயிரிழந்தார். ஆனால் அவருக்கு மாத ஓய்வூதியம் ஆயிரக்கணக்கான யூரோக்கள் வருவதை தெரிந்து வைத்திருந்த மகன் அதனை மோசடியாக பெற முடிவு செய்தார்.

தாயாரின் உடலை துணியால் சுற்றி வீட்டில் மறைத்து வைத்தார். அக்கம் பக்கத்தினருக்கு எந்தவித சந்தேகமும் எழுந்து விடாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார். தாயாரின் கணக்குக்கு ஓய்வூதம் வந்துகொண்டு இருந்தது. அதுவரை பிரச்சினை இல்லை.

இந்த நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களுடைய ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். அதற்காக நேரடியாக செல்ல வேண்டும்.

அப்படியான சூழல் அந்த இளைஞருக்கும் வந்தது. தாயாரைப் போல வேடமிட்டு, ஓய்வூதியம் பெறும் கவுன்சில் அலுவலகத்துக்கு வந்தார் அந்த மகன்.

லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், நகைகள், பழங்கால காதணிகள் என பார்ப்பதற்கு வயதான பெண்மணி போல காட்சியளித்தார்.

ஆனால் கெட்டப்பை மாத்தினாலும் கேரக்டரை மாத்தவில்லை என்பது போல பெண் குரலில் பேச முயன்ற அந்த இளைஞர் நடுநடுவே ஆண் குரலில் பேசியுள்ளார். இதனைக் கண்டு அவரை எதிர்கொண்ட அதிகாரி அதிர்ச்சியடைந்தபோது அந்த பெண்மணி இளைஞர் திருதிருவென விழித்துள்ளார்.

இதனையடுத்து அந்த அதிகாரி உற்று நோக்கியபோது அவரின் கழுத்து சற்று தடிமனாக இருந்தது, சுருக்கங்கள் கூட விசித்திரமாக இருந்ததை கண்டறிந்தார். மேலும் அவரின் கைகளில் உள்ள தோல் கூட 85 வயதுடைய பெண்ணின் தோல் போல இல்லை என்பதையும் உணர்ந்தார். உடனடியாக ஓய்வூதிய அலுவலம் தரப்பில் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் விசாரணை நடத்தியபோது அந்த இளைஞரின் வேடம் கலைந்தது.

மேலும் அவரின் வீட்டையும் சோதனை செய்தனர். அப்போது இறந்த பெண்மணியின் புகைப்படத்தையும், மாறுவேடம் பூண்ட மகனின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்து காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் கிட்டதட்ட ஒரே மாதிரி இருந்துள்ளது. ஆனால் குரல் விஷயத்தில் மாட்டிக் கொண்டார்.

இதே போன்ற கதாபாத்திரத்தில்தான் ‘ராட்சசன்’ திரைப்படத்தில் நடிகர் சரவணன் நடித்தார். வில்லனான கிறிஸ்டோபர், தனது தாயார் மேரி போல வேடமிட்டு கொலைகளைச் செய்வான்.

இரண்டுவித கெட் அப்புகளிலும், நடிப்பிலும் அசத்தினார் சரவணன்.இது குறித்து அவரிடம் கேட்டோம்.

“இயக்குநர் ராம்குமார் அளித்த அந்த வாய்ப்பை மறக்கவே முடியாது. அவரது முண்டாசுப்பட்டி படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால் அது தட்டிப்போனது. அடுத்த படத்தில் நல்ல வாய்ப்பு அளிக்கிறேன் என்றார். அதே போல அழைத்தார்.

அந்த படத்தில் கிரிஸ்டோபர் கதாபாத்திரத்திற்காக ஒரு மாதத்தில் 19 கிலோ உடல் எடையை குறைத்தேன். படத்தில் நடித்து முடிக்கும் வரை உடல் எடையை குறைத்துக் கொண்டு தான் இருந்தேன்.

மேலும், அந்த மேக்கப்புக்காக 51 முறை மொட்டையும் அடித்திருக்கிறேன். பொதுவாக, அப்படிப்பட்ட மேக்கப் போடுபவர்கள் சுமார் இரண்டு முதல் இரண்டரை மணிவரை தான் நடிக்க முடியும். ஆனால் நான் ஆறு மணி முதல் எட்டு மணி வரை அந்த மேக்கப்பை போட்டுக்கொண்டு இருந்திருக்கிறேன். சில சமயங்களில் உயிர் போகும் அளவுக்கு வலி ஏற்பட்டாலும், இயக்குநர் ராம்குமார் சார், என் மேல் வைத்த நம்பிக்கைக்காகவும், 15 வருட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதாலும் அதனை தாங்கிக்கொண்டேன்.‘ராட்சசன்’ படத்தில் கமிட்டானதும், எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. மாப்பிள்ளையாக இருக்க வேண்டிய நான் படத்திற்காக உடல் எடையை குறைத்து நோயாளி போல இருந்ததோடு, பெரிய தொகை ஒன்றை கடனாக வாங்கிக் கொண்டு, வேறு எந்த வேலையும் செய்யாமல் முழுமையாக ராட்சசனுக்காகவே என்னை தயார் படுத்துக்கொண்டிருந்தேன். காலை முதல் இரவு வரை சாலிகிராமத்தில் சாலைகளில் நடை பயிற்சி உள்ளிட்ட பல வகையில் எனது உடல் எடையை குறைத்தேன்,

படம் வெளியாகி, அனைவரது பாராட்டுக்களும் கிடைத்த பிறகு அந்த வலி எல்லாம் மறைந்துவிட்டது.. ” என்றார்.

அவரிடம், “ராட்சசன் படத்தில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்தீர்கள். அதன் பிறகு பெரிய கதாபாத்திரங்கள் அமையவில்லையே..” என்றேன்.

அவர், “விரைவில் வரும்” என்றார் நம்பிக்கை குரலில்.

வரட்டும்.

(முகப்பு படம்: ராட்சசன் சரவணன் இரு கெட் அப்கள், நிஜ (இத்தாலி) சரவணன் இரு கெட் அப்கள்..)

Related Posts