அஞ்சான்: ரீ ரிவ்யூ

அஞ்சான்:  ரீ ரிவ்யூ

சித்தார்த் ராய் கபூர், சுபாஷ் சந்திர போஸ் தயாரிப்பில்,  லிங்குசாமி இயக்க, சூர்யா நாயகனாக நடித்து 2015ல் வெளியான திரைப்படம் அஞ்சான்.
இசை: யுவன் சங்கர் ராஜா,  ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்

தற்போது இப்படம், தமிழ்நாடு முழுதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இதன், ரீ ரிவ்யூவை (விமர்சனத்தை) பார்ப்போம். மும்பையில் தாதாவாக வலம் வரும் சந்துருவின் (வித் யூத் ஜாம் வால்) உயிருக்கு உயிரான நண்பராக இருக்கிறார் ராஜு பாய் (சூர்யா). இவர்களின் வளர்ச்சியை பொறுக்காத மற்றொரு கடத்தல் மன்னன் சந்துருவை கொல்கிறான். அதேபோல் ராஜு பாயையும் சுட்டு வீழ்த்துகிறான். இதில் ராஜு பாய் எப்படியோ தப்பித்துக் கொண்டு மீண்டும் மும்பைக்கு வந்து தன் நண்பனை கொன்றவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.

நிறைய கேங்ஸ்டர் கதைகள் தற்போது வந்து கொண்டிருக் கின்றன. அதில் சில படங்கள் பார்க்கும்படி உள்ளது. 11 வருடங்களுக்கு முன்பு கேங்ஸ்டர் கதையாக உருவானதுதான் அஞ்சான். சாக்லெட் பாயாக இருந்த சூர்யாவை ரக்டுபாயாக, அதிரடி ஆக்சன் ஹீரோவாக காட்டிய படங்களில் அஞ்சான் படமும் ஒன்று.

சமந்தாவிடம் ஒரு பக்கம் காதலும் காட்ட வேண்டும், எதிரிகளிடம் இன்னொரு பக்கம் கோபத்தை காட்ட வேண்டும் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா தனது இரு மாறுபட்ட நடிப்பை ராஜு பாய் கதாபாத்திரத்தில் காட்டி நடித்திருக்கிறார்.
தனது நண்பனைப் கொன்ற வில்லனை கிளைமாக்சில் சூர்யா தந்திரமாக பிராக்கெட் போட்டு கொல்வது இப்போதும் ப்ரஷ்ஷாக இருக்கிறது. “நண்பனிடம் மட்டுமல்ல எதிரியிடம் கூட துரோகிகள் இருக்கக் கூடாது ” என்று சூர்யா பேசும் பஞ்சு வசனம் ஹைலைட்.

சமந்தா கண்ணுக்கு விருந்து படைக்கும் கிளாமர் தோற்றத்தில் வந்தாலும் சூர்யாவுடன் அவர் செய்யும் காதல் சிலுமிச்சங்கள் ரசிக்க வைக்கின்றன.

வித்யூத் ஜாம் பால் தவுசன் வாலா பட்டாசுபோல் ஒரு சண்டைக்காட்சியில் படபடவென தாவி பறந்து அசத்துகிறார்.

அஞ்சான் படத்தை ரீ ரிலீஸ்க்காக மீண்டும் சில காட்சிகளை எடுத்து சேர்த்தது போல் கில்லி மாதிரி காட்சிகள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறது. இந்த வேகம் 11 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆனபோது இல்லாமல் போனது தான் அப்போது இந்த படத்துக்கு மைனஸாக இருந்ததோ என்னவோ?.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் தெறிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு படத்தை பட்டை தீட்டி இருக்கிறது.

இயக்குனர் லிங்குசாமி அஞ்சான் ரீ எடிட்டில் செலுத்திருக்கும் கவனம் படத்தின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறது.

அஞ்சான் – ஆக்சன் பிரியர்களுக்கு மீண்டும் விருந்து.

Related Posts