இன்று..  ரசிகர்களை சந்திப்பாரா ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க இன்று ரசிகர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அனைவரும் அறிந்ததே. அதே நேரம், ரசிகர்களை ரஜினி சந்திப்பாரா என்ற கேள்வியும் சில தரப்பில் எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவர் ரசிகர்கள், கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு நேரடியாக பதில் கூறாத ரஜினி, “அது ஆண்டவன் கையில் இருக்கிறது; வரவேண்டும் என்று இருந்தால் வருவேன்..” என்றெல்லாம் யூகத்தை அதிகரிக்கும்படியாக அதே நேரம் ஒரு  தீர்மானத்துக்கு வரமுடியாதபடி பதில் அளித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் வருடம் ரசிகர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார்.   ஆனால் அதன் பிறகும் அரசியல் பணிகள் நடந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில்,  அக்டோபர் மாதம் ரஜினி பெயரில் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில்,  ‘அக்டோபர் 2 ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சி பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என நினைத்தேன்.  கொரோனா பிரச்சினை காரணமாக, யாரையும் சந்திக்க முடியவில்லை. தவிர, 2011 ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தேன். அரசியலில் ஈடுபடலாமா என்று மருத்துவர்களிடம் கேட்டபோது, அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றனர். ஆகவே சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களும், ரசிகர்களும் என்ன முடிவு எடுக்க சொல்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறப்பட்டு இருந்தது.

பிறகு ரஜினி, “அந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை. ஆனால் அதில் கூறப்பட்டு இருப்பவை உண்மையே” என்றார்.

மேலும், “தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி தெரிவிப்பேன்” என்றார்.

இதனால், அவர் அரசியல் கட்சியை ஆரம்பிப்பாரா இல்லாயா என  ரசிகர்கள்  மீண்டும் குழப்பமடைந்தனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை, சென்னை வரும்படி ரஜினி அழைத்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கூட்டம் நடக்கிறது. இதில் ரஜினி கலந்துகொண்டு பேசுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஆனால், “இன்றைய கூட்டத்தில் ரஜினி கலந்துகொள்ள மாட்டார்!” என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது, “தனது உடல் நிலை குறித்து ஏற்கெனவே ரஜினி வெளிப்படையாக அறிவித்துவிட்டார். வயது முதிர்வு, சிறுநீரக அறுவை சிகச்சை காரணமாக கொரோனா காலத்தில் பொது இடத்துக்கு வருவது நல்லதில்லை என நினைக்கிறார். ஆகவே, தனது கருத்தை அறிக்கையாக எழுதி, மன்ற நிர்வாகி சுதாகரிடம் அளிப்பார். அதை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்கள் முன் சுதாகர் படிப்பார். மற்றபடி ரசிகர்களை ரஜினி சந்திக்க மாட்டார்” என்று கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம், “நேரடியாக ரஜினி வரமாட்டார் என்று ஒரு கருத்து இருப்பது உண்மையே. ஆனால் வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் ரஜினி பேசுவார். அதை மண்டபத்தில் இருந்தபடி ரசிகர்கள் கேட்பார்கள்” என்றும் கூறப்படுகிறது.

இதற்கு, “அப்படியானால், ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவரவர் ஊரில் – வீட்டில் இருந்தபடியே வீடியோ மூலமாக பார்க்க ஏற்பாடு செய்திருக்கலாமே. பல கட்சிகள் அப்படித்தானே செய்கின்றன? எதற்காக மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைக்க வேண்டும்” என்ற குழப்பமான பதிலும் கேள்வியாக கேட்கப்படுகிறது.

“ஆக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதைப்போலவே, மண்டபத்துக்கு வந்து ரசிகர்களை சந்திப்பாரா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது”  என்கின்றனர்.

அரசியல் வட்டாரம் இதில் நிர்வாகிகளுடன் ரஜினி வீடியோ மூலம் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Related Posts