கைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண காமெடி கலாட்டா
சென்னை; சந்தீப் கிஷன் – இயக்குநர் சினிஷ் நண்பர்கள் இருவரும் எந்தவொரு படத்திலும் இணைந்து பணிபுரியவில்லை. அந்த நட்பு இப்போது திரையில் எதிரொலிக்கவுள்ளது. ஆம், இருவரது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தெலுங்கு படமொன்றை தயாரிக்கவுள்ளனர். ‘வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சந்தீப் கிஷன் தயாரிப்பு நிறுவனமான ‘கண்ணாடி’ படத்தின் தெலுங்கு பதிப்பை தயாரித்து வெளியிட்டது. அந்தப் படம் ரசிகர்கள் இடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘நட்பே துணை’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஏ1 எக்ஸ்பிரஸ்’ படத்தை தயாரித்து வருகிறார்.
‘பலூன்’ படத்துக்குப் பிறகு ‘சோல்ஜ்சர்ஸ் ஃபேக்டரி’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார் இயக்குநர் சினிஷ். தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வரும் அவர் ‘டிக்கிலோனா’ திரைப்படம் இவருடைய தயாரிப்பில் உருவானதே. அதனை தொடர்ந்து அஞ்சலி நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். அதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தற்போது ஆனந்தி ஆர்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்க வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ் – சோல்ஜ்சர்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘விவாஹ போஜனம்பு’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இதன் டைட்டில் லுக் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ராம் அப்பாராஜூ இயக்கவுள்ள இந்தப் படத்தில் நடிகை, நடிகர் யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு. முழுக்க யதார்த்த வாழ்க்கையைச் சொல்லும் திருமண நகைச்சுவையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு திருமண காமெடி கலாட்டா தயார் என்பதை உறுதியாக நம்பலாம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார் என்படதை புரிந்து கொள்ளலாம்.
யாழினி சோமு