கதைக்காக காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்…!
இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நீண்ட காலம் காத்திருந்தேன் என நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர், நடிகைகள் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நடிகர் சோனு இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். எனக்கு இந்த வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றார்.
பாடலாசிரியர் சிவா பேசும்போது,
இப்படத்தில் 4 பாடல்களையும் நான் தான் எழுதினேன். இப்படத்திற்கு மற்றவர்களை விட தனாவின் பங்கு அளப்பரியதாக இருந்தது. இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. சித்ஸ்ரீராம் பாடகராக வந்ததும் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமைந்தது. புதுபுது யோசனைகளைக் கூறினார் என்றார்.
நடிகர் சாந்தனு பேசும்போது,
கடந்த 10 வருடங்களாக போராடிக் கொண்டிருந்தேன். அதில் கிடைத்த அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது. அதன்பிறகு இந்த படத்தின் மூலம் சிறந்த பாதை உருவாகியுள்ளதில் மகிழ்ச்சி. இப்படம் குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். என்னுடைய இயல்பான கதாபாத்திரம் தான் இப்படத்தில் பிரதிபலிக்கும். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறேன் என்பதில் பெருமை.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,
தனா இந்த கதையைக் கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி இருக்கும் என்பதை அவர் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டுமென்ற எனது கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். இரண்டு படங்களிலுமே தங்கை கதாபாத்திரம் தான். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘ஈஸி’ பாடல் தான்.
ராதிகாவுடன் ஏற்கனவே ‘தர்மதுரை’ படத்தில் நடித்திருக்கிறேன். அவருடைய நடிப்பை மிகவும் ரசித்துப் பார்ப்பேன். இப்படத்தின் மூலம் இன்னும் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடிக்கும்போது எனக்கு வயது 22. இந்த சிறிய வயதில் யாரும் இதுபோன்ற முதிர்ச்சியான பாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை. அதன்பிறகு தான் சிலர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். நான் எப்போதும், எனது கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும்தான் பார்ப்பேன் என்றார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது,
மணிரத்னத்தின் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி. தனா என்னிடம் கதை கூறினார், கதை வித்தியாசமான குடும்ப கதையாக இருந்ததால் சம்மதித்தேன். எந்த படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்று தான் பார்ப்பேன். இயக்குநரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது.கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டத்தில் நேரடியாகத்தான் படப்பிடிப்பு நடத்தினோம்.
முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குநர் மணிரத்னம் வந்தார். அவரைப் பார்த்ததும் சிறிது பதட்டம் இருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் தங்களுடைய திறமையை நிரூபிக்கும் வகையில் நடித்தோம்.
ராதிகா சரத்குமார் பேசும்போது,
சரத்குமார் தான் முதலில் கதை கேட்டார். பிறகு எனக்கும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி.
சரத்குமார் பேசும்போது,
தனா கதைகூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி என்றார்.
இயக்குநர் தனா பேசும்போது,
வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்பு ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். இந்த வாய்ப்பால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்றார்.
விழாவின் இறுதியில் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது. படத்தை வெளியிடும் Ynot சசி மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.