விருந்து : திரைப்பட விமர்சனம்

விருந்து : திரைப்பட விமர்சனம்

நாயகி பெர்லியின் தாய் மற்றும் தந்தை அடுத்தடுத்து மர்மமாக மரணமடைகிறார்கள். சந்தேகமடைந்த காவல்துறை, பெர்லிக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதையும் மீறி, அவரை கொலை செய்ய மர்ம கும்பல் முயற்சி செய்கிறது. ஒரு கட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அந்த கொலைகார கும்பலிடம் சிக்குகிறார் பெர்லி.

அப்போது அவரது குடும்ப நிறுவனத்தின் நிதி ஆலோசகர் தேவ நாராயணன், காப்பாற்றுகிறார். தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். ஆனால் அவரையே கொல்ல முயல்கிறார் பெர்லி.

அதன் பிறகு என்ன நடந்தது, அடைக்கலம் தந்தவரையே நாயகி கொலை செய்ய முயன்றது ஏன், நாயகியின் தாய் தந்தையை கொன்ற கும்பல் யார், நாயகி தப்பித்தாரா என பதறவைக்கும் கேள்விகளுக்கு த்ரிலிங்காக விடை சொல்கிறது மீதி படம்.நாயகியின் தந்தை ஸ்தானத்தில் – நிதி ஆலோசகர் தேவ நாராயணனாக – வருகிறார் அர்ஜூன். வயதுதான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிர இளமையும், அதிரடி ஆக்சனும் இன்னும் அர்ஜூன், ஆக்சன் கிங்தான் என்பதை நிரூபிக்கின்றன. சண்டைக் காட்சிகளில் தூள் பறத்துகிறார். அதே நேரம், தன்னை கொலை செய்ய நாயகி முயற்சிக்கும்போது அதிர்வது, உண்மையை நெகிழ்ச்சியுடன் விளக்கிச் சொல்வது என நடிப்பிலும் முத்திரை பதித்து இருக்கிறார்.

நாயகி பெர்லியாக நிக்கி கல்ராணி நடித்து இருக்கிறார். அப்பா மீதான பாசம், அவரை காணவில்லை என்றவுடன் பதற்றம், அவரது துர் மரணத்தை அதிர்ந்து அதிர்ச்சி, தன் உயிருக்கும் ஆபத்து என்றவுடன் ஏற்படும் பயம்… என சிறப்பாக நடித்து இருக்கிறார் நிக்கி கல்ராணி.

ஆட்டோ டிரைவராக வரும் கிரீஷ் நெய்யார், சாத்தானின் தூதராக வரும் ஹரிஷ் பெராடி உள்ளிட்ட அனைவரும் இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

ரதீஷ் வேகாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு அசத்தல். குறிப்பாக அடந்த வனப்பகுதியை திகிலும் அழகுமாக காண்பித்து ரசிக்க வைக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெறும் மர்ம பங்களாவிலை வித்தியாசமான கோணங்களில் அளித்து இருக்கிறார்.

வி.டி.ஸ்ரீஜித்தின் படத்தொகுப்பு கச்சிதம்.

படம் துவங்கியதில் இருந்தே, அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு சிறப்பாக திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார், தாமர கண்ணன், அதிலும் அதிரவைக்கும் அந்த இறுதிக் காட்சி நடுங்கவைக்கிறது.

வெறும் சஸ்பென்ஸ் த்ரில்லர் என்கிற அளவில் நின்றுவிடாமல், மக்களுக்கு மூட நம்பிக்கை வேண்டாம் எனகிற செய்தியையும் சொல்லி இருக்கிறார்.

மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

Related Posts