விடுதலை 2 : திரை விமர்சனம்

விடுதலை 2 : திரை விமர்சனம்
மருதையாற்று ரயில் பால குண்டு வெடிப்பு, கீழ்வெண்மணி கொடுமை, புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் வாழ்க்கை சம்பவங்கள், வாச்சாத்தி கொடூரம், சிறப்பு அதிரடிப்படையின் கேம்ப் கொடூரங்கள், அரியலூர் தொழிற்சாலை விவகாரம், மொழிப்போர், ஈழ விவகாரம், நடிகர்களின் அரசியல்… இப்படி நாம் அறிந்த, கேள்விப்பட்ட கடந்த கால சமகால சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது கதை.
ஆம்..
வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களை அழகாக சரம் தொடுத்து, சிகப்பு + கருப்பு மாலையாக அளித்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
சுவாரஸ்யமான கதை, திரைக்கதை, ரசிக்கவைக்கும் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம்… இதெல்லாம் இருக்கட்டும்.
கதையின் வழியே இத்தனை அழகாக அரசியலை, அதிகார திமிர்த்தனத்தை, எளிய மக்களின் வாதையை, அவர்களது போராட்டத்தை காட்சிப்படுத்த முடியுமா என வியக்க வைத்து இருக்கிறார் வெற்றிமாறன்.
அதே போல் பாத்திரப்படைப்பு… அற்புதம்.
அநீதியைக் கண்டு பொங்கி.. கையாலாகத நிலையை நினைத்து மருகி… மெல்ல மெல்ல பொதுவுடமைப் போராளியாக மலரும் வாத்தியார், பிழைப்புக்காக காவல்துறை வேலைக்கு வந்து இங்கு நடக்கும் அநீதிகளைக் கண்டு குமுறி… மெல்ல மெல்ல மனமாற்றம் அடையும் கடைநிலை காவல் ஊழியர், “வழக்கம் போல கியூ பிராஞ்ச்காரங்க அரெஸ்ட் பண்ணி கூப்டு போறாங்கனு சொல்லிரு” என மனைவியிடம் சொல்லிவிட்டுச் செல்லும் வழக்கறிஞர் தோழர்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த சுவையான கதைக்கு இடையில் மக்கள், அரசியல், பொதுவுடமை, உரிமை என பாடம் எடுக்கும் நீள காட்சிகளை வைத்த வெற்றிமாறனின் தைரியம் பாராட்டத்தக்கது.
பார்க்க வேண்டிய படம்.. படிக்க வேண்டிய பாடம்!
– டி.வி.சோமு