விமர்சனம்: வெப்பம் குளிர் மழை

விமர்சனம்: வெப்பம் குளிர் மழை

குழந்தை இல்லாத தம்பதிகளை ஊர் உலகம் கிண்டலடிப்பதும், மன நோகச் செய்வதும் இன்றைய காலகட்டத்திலும் நடக்கிறது. அதுவும் மனைவிமார்கள்தான் சமூகத் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மலடி என்கிர பட்டப் பெயருக்கு ஆளாகிறார்கள்.

இந்த பிரச்சினையை அடிப்படையாக வைத்து, வெப்பம் குளிர் மழை படத்தை அளித்து உள்ளனர்.

ஹாஸ்டக் f d f s நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. பாஸ்கல் வேதமுத்து இப்படத்தை இயக்கி உள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்.  மணமாகி பல வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லாத தம்பதி. ஊரும், பெண்ணின் மாமியாரும் இதை சுட்டிக்காட்டி அந்த பெண்ணை இகழ்கிறார்கள்.

அப்பெண் தனது கணவனை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைக்கிறார். கணவனோ வர மறுக்கிறார். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் மதுரையில் உள்ள ஒரு ஹாஸ்பிடலுக்கு பரிசோதனைக்கு வருகிறார். பரிசோதனையின் முடிவில் கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்து கொள்கிறார்.  ஆனால் இதை கணவரிடம் சொல்லவில்லை.

மருத்துவத்தின் உதவியால் கணவனுக்கு தெரியாமல் கர்ப்பமாகி குழந்தை பெற்று கொள்கிறார் அந்தப் பெண். குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து இந்த உண்மை கணவனுக்கு தெரியவரும்போது தம்பதிகளுக்குள் மிகப்பெரிய பிரச்னை பூதாகரமாக வெடிக்கிறது.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

நாயகன் த்ரவ்  சிறப்பாக நடித்து உள்ளார். ஆணாதிக்கம் கொண்ட கணவனாக,   ஒரு தாழ்வு மனப்பான்மை கொண்ட மனிதனாக.. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகி இஸ்மத் பானுவும் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக, “நான் மலடியா?” என்று கதறி  அழும் காட்சியில் நம்மை கலங்கடித்து விடுகிறார்.

மாமியாராக வரும் ‘என் உயிர் தோழன்’ ரமா,  சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார். மருமகளை டார்ச்சர் செய்யும் காட்சிகளில் கொடூர மாமியாராக மிரட்டுகிறார்.

சங்கர் ரங்கராஜனின் இசை, பிருத்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு இரண்டும் படத்துக்கு பலம்.

குழந்தை இல்லை என்றால் ஊரும் உலகமும் அந்தத் தம்பதிகளை எவ்வளவு டார்ச்சர் செய்கிறது.. ஏன், குடும்பத்துக்குள்ளேயே ஏச்சு பேச்சுக்களை சகிக்க வேண்டி இருக்கிறது என்பதை சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து.

அறிவியல் வளர்ந்த பின்பும் குழந்தை இல்லாத பிரச்னைக்கு பெண் மட்டுமே காரணம் என்று நம்புபவர்கள் பலர் உண்டு. ஆகவே சமுதாயத்துக்கு அவசியமான திரைப்படத்தை அளித்து உள்ளார்.

மருத்துவம் எல்லாம் உடலுக்கு மட்டும்தான் தம்பதியின் உள்ள்த்தில் பரஸ்பரம்  அன்பு மட்டும் போதும் என்பதை சிறப்பாக சொல்லி இருக்கிறது ‘வெப்பம் குளிர் மழை’.

அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Related Posts