ஜி.வி.பிகராஷிடம் திருட விரும்பும் வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் அவர்களின் முகநூல் பதிவு:

“நானும் ஜீவியும் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த திரைப்படத்திற்காகத் தான் சந்தித்தோம்.
ஆகவே கண்கள் எதிர் கண்களைச் சந்திக்க சற்று தயங்கியவண்ணம் இருந்த காலம்.

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் பாடல் கம்போஸிங் துவங்கியது. ஜீவி இடையறாது வேறு படப்பிடிப்புகளுக்கு சென்ற வருகிற பின்மாலைகளில் அல்லது பின்னிரவுகளில் இசைப்பணியையும் இடையறாது செய்தவண்ணம் இருந்தார்.
அத்தனை பெரும் உழைப்பாளி.

“சூட்டிங் விட்டா ஸ்டுடியோ, ஸ்டுடியோ விட்டா வீடு இப்படி தான் என் சின்னவயசுல இருந்து பழக்கம் அதுனால இது உழைப்புன்னு சொல்றது விட இது என் பழக்கம் என் விருப்பம் என் ஆசை” என்று என் கருத்தை மறுத்தலிப்பார்.
நான் பார்க்க வளர்ந்த சிறுவன் அல்லவா!

எந்த கவலையையும் பரபரப்பையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கிற குணத்தை மட்டும் ஜீவியிடம் களவாட வேண்டியிருக்கிறது.

 ஒரு படப்பிடிப்புக்கு சென்ற வந்த அந்திமாலையில் எனக்கான கம்போஸிங் நேரத்தை ஒதுக்கியிருந்தார். இசைக்கூடத்தில் பாடலின் சூழலை விவரித்தேன். கண்கள் மெதுவாக மலர்ந்தன.
அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தவர் மெதுவாக எழுந்து கணினிகளை ஆன் செய்து கணினியோடு இணைக்கப்பட்டுள்ள பியானோவில் கண்களை மூடி அமர்ந்தார்.ஜீவிக்கு பியானோவில் பாடலை கம்போஸிங் செய்ய அவ்வளவு பிடிக்கும்.

புத்தம்புதுக்காலை இணையத்திரைப்படத்திற்கான பிரத்யேக பாடல் காட்சியில் வெறிக்கொண்டு வீசும் கடல்அலைகளுக்கு நடுவே பியோனோவுடன் ஜீவி அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போது 1993ம் ஆண்டு வெளிவந்த தி பியோனோ திரைப்படத்தின் காட்சித்துணுக்குப் போல தோன்றியது அத்தனை அழகு. பேரலைகள் ராஜீவ்மேனன் அவர்களின் கேமராவைத் தேடி வந்து முத்தமிட்டு விட்டு திரும்பும் பேரன்பு அதற்கு.(உதாரணம் பம்பாய் திரைப்படத்தில் வரும் உயிரே பாடல் காட்சி மற்றும் கடல் திரைப்படம்)

ஜீவி இசைக்கூடத்தில் உள்ள பியோனோவில் ஒரு டியூனை வாசித்தார். டியூனைக்கேட்ட மாத்திரத்தில் நல்லாயிருக்கு என்று சொல்லும் அளவிற்கு எனக்கு இசையறிவு இல்லை. ஒருநாள் முழுக்க நான் அந்த டியூனைக் கேட்டவண்ணம் இருப்பேன்.அடுத்தநாள் காலையும் அந்த டியூன் எனக்குள் கேட்டத் துவங்கினால் அது எனக்கு பிடித்திருக்கிறது என்று பொருள். என் உதவியாளர்களும் என் நண்பர்களும் கூட கேட்டார்கள். உருகுதே போல இல்லை, உன் பெயரைச்சொல்லும் போதே போல இல்லை என பலவிதமான விமர்சனங்கள். எனக்கு கதையோடு ஒட்டி யோசிக்கும் போது டியூன் பொருந்திப் போனது. இதன் பிறகு இந்த கோடு ஓவியமாக உயிர் பெறும் அழகை நான் பலமுறை அவரது இசைக்கூடத்தில் பார்த்திருக்கிறேன்.

ஆகவே இந்த டியூனோடு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். கபிலோனோடு ஆல்பம் திரைப்படத்தில் பணிபுரிந்த நெருக்கம் இன்னும் மிச்சம் இருந்தது. இரு நாட்கள் என் அலுவலகத்திலே அமர்ந்து பாடல்வரிகளை எனக்கும் என் கதைக்கும் நெருக்கமாக அன்போடு எழுதித்தந்தார். என் படத்தின் பட்ஜெட்டோடு ஒட்டி சம்பளம் குறைத்து பெறவும்

சம்மதித்தார். இந்த காலத்தில் நட்புக்காக சம்பளத்தைக் குறைப்பவர்கள் மிகக் குறைவு. நாக்குக்கிடையே அமிர்தத்தை வாரி வழங்கியவண்ணம் இருக்கும் நெல்லிக்கனிப் போல இன்றும் தொடரும் கபிலனின் நட்புக்கு நன்றி.

பாடலை முதலில் ஜீவி தான் பாடியிருந்தார். திடீரென்று ஜீவி என்னை அழைத்து தனுஷ் அவர்கள் தானே பாடவிரும்புவதாகவும் எனக்கும் அவர் பாடினால் பெரியளவில் ரசிகர்களை சென்றடையும் என்று நம்பிக்கையுடன் கூறினார். ஆயிரக்கணக்கான மின்மினிகள் பறந்து வந்து என் இல்லத்தின் இருளை ஒளியேற்றியது போல இருந்தது.

இன்று இந்த பாடல் வெளியாகி 10 மில்லியன்கள் எட்டியுள்ளது. அதாவது ஒரு கோடி நபர்களுக்கு விருப்பமான பாடலாக மாறியுள்ளது.

இசையமைப்பாளர் G.V.Prakash Kumar அவர்களுக்கும், நடிப்பு அசுரன் Dhanush அவர்களுக்கும், கண்களில் இருந்து நீங்காத பேரழகி Aditi Rao Hydari அவர்களுக்கும்,
காதல் உருகும் கவிதை வரிகளை தந்த @kavi kabilan அவர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றி!”

 

Related Posts