‘நெஞ்சைப் பதற வைக்கிறது..’ – புதுச்சேரி சிறுமி கொலை குறித்து நடிகர் விஜய் அறிக்கை!
புதுச்சேரி சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில், “புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக, புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகள் அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு வயது 9. இவர் கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென மாயமானார்.
எங்கு தேடியும் சிறுமி கிடைக்காமல் போன நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்தப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் எந்த தகவலும் இல்லை.
இதனையடுத்து சிறுமியை விரைவாக மீடகக் கோரி சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே கடந்த கடந்த 4-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து விசாரணையை முடுக்கிய காவல்துறையினர் 20-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். ஆனாலும் எந்த பயனும் இல்லை.
இந்நிலையில் நேற்று தினம் சோலை நகர் பகுதியில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
காவல்துறை அங்கு சென்று பார்த்தபோது தேடப்பட்ட சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு, வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே காவல்துறையின் மெத்தனத்தால்தான் இது அரங்கேறி இருக்கிறது என்று கூறி குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். அதனை பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இரவு மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில், முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதோடு, கொலை செய்ததும் தெரிய வந்தது. மேற்கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.