’டிரெண்டிங்’ திரைப்பட விமர்சனம்

’டிரெண்டிங்’ திரைப்பட விமர்சனம்

சமூகவலைதளங்கள் வந்த பிறகு வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் வருகின்றன என்பதை த்ரில்லர் பாணியில் சொல்கிற திரைப்படம், டிரெண்டிங்.

கலையரசன் – பிரியாலயா தம்பதி  ஒரு யூடியுப் சேனல் நடத்தி வருகிறார்கள்.  3 லட்சத்திற்கும் மேலானவர்கள் பின்தொடர..  லட்சக்கணக்கில் வருமானம். இதை நம்பி தவணை முறையில் பங்களா, கார் வாங்கி சுகமாக வாழ்கிறார்கள்.

திடீரென்று ஒரு நாள் அவர்களது யூடியுப் சேனல் டெலிட் ஆகிவிடுகிறது.   வருமானம் இல்லாமல் போக…  கடன் காரர்கள் பணம் கேட்டு மிரட்ட.. தவிக்கிறார்கள்.

அந்த நேரத்தில் மர்ம போன் ஒன்று வருகிறது.  தாங்கள் சொல்லும் ரியாலிடி நிகழ்ச்சியில் ஒரு வாரம் வீட்டிலிருந்தே பங்கேற்றால் – வெற்றி பெற்றால் – இரண்டுகோடி ரூபாய் கிடைக்கும் என்கிறது.  இவர்களும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

அதன் பிறகு நடப்பதை த்ரில்லர் பாணியில் சொல்லி இருக்கிறார்கள்.நாயகன்  கலையரசன் மற்றும் நாயகி  பிரியாலயா இருவருமே தங்களது சிறப்பான நடிப்பால் முழுப் படத்தையும் தோளில் சுமக்கிறார்கள். ப ண சிக்கலால் சோர்வடைவது,  திடீர் போன் அழைப்பை நம்பாதது, பிறகு நம்பி விளையாட்டில் பங்கேற்பது,  அதனால் ஏற்படும் கோபதாபங்கள்..  என எல்லா உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக கலையரசன், தனது மனைவியின் கடந்த கால உண்மை ஒன்றை நினைத்து அதிர்ச்சி அடைவது,  குமைவது, பிறகு பாத் டப்பில் நடந்துகொள்ளும் குரூர செய்கை என மிரட்டி இருக்கிறார்.

சிறிய வேடம் என்றாலும் பிரேம் குமாரும் வழக்கம்போல இயல்பாக – சிறப்பாக நடித்து கவர்கிறார். மற்றும் பெசண்ட் நகர் ரவி, வித்யா போர்கியா, ஷிவனயா  உள்ளிட்டோரும் இயல்பாக நடித்து உள்ளனர்.

ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும்  அலுப்புதட்டாமல், பலவித கோணங்கள் மூலம் காட்சிகளில் வித்தியாசத்தை காட்டி ரசிக்க வைத்துவிடுகிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து உள்ளது. குறிப்பாக அந்த மர்ம நபரின் குரல் வரும்போது வரும்  பீஜிஎம் மிரட்டுகிறது.

நாகூரான் ராமச்சந்திரனின் எடிட்டிங் கச்சிதம்.

யூடியுப் மூலம் வீடியோ வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் பலர் அதற்காக எந்த அளவுக்கு தங்களையும் தாழ்த்திக்கொண்டு பிறரையும் மனிதராக மதிக்காமல் செயல்படுகின்றனர் என்பதை சுவாரஸ்யத்துடன் அளித்து உள்ளார் இயக்குநர் சிவராஜ்.

படம் அல்ல பாடம் என்பார்களே… அந்த பாடத்தை ரசிக்கும் வகையில் தந்திருக்கிறது டிரென்டிங்.