“நான் வியந்த மனிதர் இவர்தான்!”: ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ விழாவில் விஜய் சேதுபதி!

“நான் வியந்த மனிதர் இவர்தான்!”: ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ விழாவில் விஜய் சேதுபதி!

விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம்  தயாரிக்க,  தேசிய விருது படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு, பிரிகிடா  உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம்,  ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’.

இத்திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ”இயக்குநர் சீனு ராமசாமியிடம் எனக்கு மிகவும் பிடித்தது… தேனியில் அவர் நூறு படம் எடுத்தாலும் ஒவ்வொரு படத்திலும் தேனியை வித்தியாசமான கோணங்களில் காண்பிப்பார். புதிதாக காண்பது போல் இருக்கும். அதுதான் அவருடைய பலம்.

கதை சொல்லும் போதும் அதை படமாக்கும் போதும் எந்த தருணத்திலும் அவர் சிறிது யோசித்தோ அல்லது தடுமாறியோ நான் பார்த்ததே இல்லை. தன்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் பணத்தை முதலீடு செய்தால் அதனை எவ்வளவு சிக்கனமாக செலவு செய்து படத்தின் தரத்தை குறைக்காமல் ரசிகர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் படத்தை நிறைவு செய்ய முடியுமோ, அதனை நேர்த்தியாக செய்யக்கூடியவர் சீனு ராமசாமி.

அந்த வகையில் நான் பார்த்து வியந்த இயக்குநர் சீனு ராமசாமி. இதுவரை அவரது இயக்கத்தில் நான் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திலிருந்து ‘மாமனிதன்’ வரை அவருடன் இணைந்து பணியாற்றும் போது எங்களுக்கான பட்ஜெட் அதிகமாக கிடைத்தாலும் படத்திற்கு என்ன தேவையோ அதை பொறுப்புணர்ந்து செயல்படுபவர் சீனு ராமசாமி. அதனால் சீனு ராமசாமி போன்ற ஒரு இயக்குநர் மூலம் ஏகன் அறிமுகமாவதற்கு ஏகன் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

நேரம் கிடைக்கப்போதெல்லாம் தான் கற்றுக் கொண்ட விஷயத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடியவர் சீனு ராமசாமி. நிச்சயம் படப்பிடிப்பு தளத்தில் அவர் ஏகனுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருப்பார்” என்றார்.