திருப்பாவை பாடல் 2

 

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்; பகவான் கிருஷ்ணன் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமியர்களே’’ நாம், இந்த மண்ணுலகில் இருந்து விடைபெற்று, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் காதுகொடுத்து கேளுங்கள்.

 நெய் உணவில் எடுத்துக்கொள்ளக்கூடாது, பால் பருகக்கூடாது. அதிகாலையே குளித்து விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் பூ சூடக்கூடாது மார்கழியில் பூக்கும் மலர்கள் எல்லாம் பெருமாளுக்கே சொந்தமானது.

 தீய என்னங்களை மனதாலும் நினைக்கக்கூடாது. கெட்ட சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி யாரிடமும் குறை சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு உணவு தந்து உதவவேண்டும்.

ஒரு செயலில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் நாக்கைகட்டுபடுத்த வேண்டும். நாம் விரும்பி சாப்பிடும் உணவு நம் எதிரே இருந்தாலும் அதை சாப்பிடாமல் மனதை கட்டுக்குள் வைக்கவேண்டும். அப்படி இருந்தாலே மனமானது ஒருநிலைப்படும். நம் மனதையும் ஆண்மாவையும் ஒருநிலைப்படுத்தும்போது கடவுள் கண்ணுக்குத் தெரிவான்.

அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதையும் உடலையும் சுத்தமாக்குவதை கடமையாக்குகிறாள் ஆண்டாள்.