புரட்டாசி சனி: என்ன சிறப்புகள் தெரியுமா?
புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் மனக்கண்ணில் பெருமாளின் திருவுருவமே தோன்றும். இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போர் உண்டு.
பெருமாளுக்கு உரிய மாதம் புரட்டாசி என்பதற்குக் காரணம் உண்டு.
மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவான புத பகவான் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். இந்த ராசியில் சூரியன் சஞ்சரிப்பது புரட்டாசி. சூரியன் என்பது பெருமாளின் அம்சம்.
தவிர, புரட்டாசி திருவோணத்தில்தான் ஸ்ரீனிவாசப்பெருமாள் அவதரித்தார். ஆகவேதான் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரியதாகிறது.
ஆகவே, புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருமலைவாசன் ஏழுமலையானுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.
திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.
புரட்டாசி மாத சனிக்கிழமைகள் இன்னும் உகந்தவை. இந்த நாட்களில் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.
திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள். சனிபகவானல் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது அவசியம்.
உடல் நோய், காரிய தடை, பாதிக்கும் தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகும். மேலும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கும்.
தவிர,. உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து.
சனிக்கிழமை விரதம்
இன்று ஸபெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டு, பிரார்த்தனைகளை செலுத்தலாம். ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்று படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.
– யானினி சோமு