‘கே டி: தி டெவில்’ படப்பாடல் ‘திற நீ எந்தன் தரணி’: அதிரடி ஆட்டம்… அதிரும் அரங்கம்!
பான் இந்தியா சினிமா உலகில் பெரும் புயலைக் கிளப்பக் காத்திருக்கும் ‘கே டி : தி டெவில்’ திரைப்படத்திலிருந்து, ரசிகர்களின் நரம்புகளை முறுக்கேற்றும் விதமாக ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ எனும் அதிரடி பாடல் வெளியாகியுள்ளது. பிரேம் இயக்கத்தில், கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இந்தப் படம், தற்போதே எதிர்பார்ப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டது. துருவா சர்ஜா நாயகனாக மிரட்ட, ஷில்பா ஷெட்டி, ரவிச்சந்திரன் என நட்சத்திரப் பட்டாளமே அணிவகுக்கும் இப்படத்தில், இந்தப் பாடல் ஒரு பக்கா ‘பார்ட்டி அந்தம்’ ஆக உருவெடுத்துள்ளது.
திரையில் மின்னல் வேக நடன அசைவுகளுடன் நோரா ஃபதேஹி தோன்ற, அவருக்கு இணையாக சஞ்சய் தத் தனது ஆளுமைமிக்க தோற்றத்தால் மிரட்டியிருக்கிறார். அர்ஜுன் ஜன்யாவின் துள்ளல் மிகுந்த இசையில், மதன் கார்க்கியின் வரிகள் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக, பாடகி ராஜலட்சுமியின் கணீர் குரல், கேட்பவர்களை அப்படியே எழுந்து ஆட வைக்கும் ஒரு மாயத்தைச் செய்கிறது. இசை ஒருங்கிணைப்பு முதல் தாள லயம் வரை அனைத்தும் ஒரு பக்கா கமர்ஷியல் விருந்தாகத் தயாராகியுள்ளது.
வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி வரும் இந்தப் பாடல், இளைஞர்களின் பிளேலிஸ்ட்டையும் நடன மேடைகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகும் ‘கே டி : தி டெவில்’, ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. திரையில் நோரா ஃபதேஹி – சஞ்சய் தத் காம்போவின் அந்த அதிரடி ஆட்டத்தைக் காண ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

