தாய்வழிச்சமூகமாக விளங்கி வந்த தமிழ்ச் சமூகத்தில் ஆதிகாலந்தொட்டே பெண்களுக்கு முன்னுரிமையும், முதன்மைத்துவமும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது; தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள். அதற்குப் பல்வேறு இலக்கியச்சான்றுகளையும், வரலாற்றுத்தரவுகளையும் எடுத்துரைக்கலாம்.
இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப்படையெடுப்புகளினாலும், ஆரிய இனக்கலப்புகளினாலுமே பெண்களுக்குரிய தலைமைத் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு, பெண்ணடிமைத்தனம் வேரூன்றப்பட்டிருக்கிறது என்பதை வரலாறு பகர்கிறது. ஆகவே, அத்தகைய அடிமைத்தனத்திற்கும், உரிமைப்பறிப்புகளுக்கும் எதிராகப் போராடி அவர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர வேண்டியது ஒவ்வொருவரது தார்மீகக்கடமையாகும்.
பெண்களுக்கான உரிமையைப் பேசும் அதே நேரத்தில், அவர்களுக்கான நடமாடும் உரிமையே கேள்விக்குறியாகும் விதத்தில் நாள்தோறும் நடந்தேறும் பாலியல் வன்முறைகள் பெருங்கவலையைத் தருகின்றன. அதில் பெண் குழந்தைகளும் பலியாவது சகிக்கவே முடியாதப் பெருங்கொடுமையாகும்.
பெண்களை நதியாகவும், தெய்வமாகவும் உருவகப்படுத்தி வழிபடும் நாட்டில் பெண்களுக்கெதிராக நடைபெறும் இத்தொடர் தாக்குதல்கள் யாவும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமான தலைகுனிவு என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
ஆணாதிக்க வன்முறையும், பாலியல் குற்றங்களும் விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு வர்க்கப்பெண்கள் மீதுதான் அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இவ்வகைத் தாக்குதல்கள் யாவும் ஒட்டுமொத்தப்பெண் சமூகத்தின் மீது ஏவப்படுபவையே என்பதை எவரும் மறுக்க முடியாது.
பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் நீண்ட நெடுங்காலமாகவே தமிழகத்தில் பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, செயலாக்கம் பெறவில்லை. ஆனால், அதனை ஈழப்பெருநிலத்தில் முழுமையாக சாத்தியப்படுத்தி நிறுவிக்காட்டினார் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அவர்தம் பிள்ளைகள் அதனைத் தாயகத்தமிழகத்தில் செயற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு எல்லாத்தளங்களிலும் பணியாற்ற வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

