எம்.ஜி.ஆர். 108வது பிறந்தநாள்:யுகங்கள் ஆனாலும் புகழ் நிலைத்திருக்கும் – சைதை துரைசாமி
கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மம் தலைகாக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். 108-வது பிறந்தநாள் விழா சென்னை ராமாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு உலக எம்.ஜி.ஆர். மன்ற பேரவை தலைவர் சென்னை பெருநகர முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி தலைமை தாங்கி பேசினார். 35 ஆண்டுகள் கடந்த நிலையில் எம்.ஜி.ஆர். புகழும், பெருமையும், செல்வாக்கும் கொஞ்சமும் குறையவில்லை என்று மனித நேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து அவர் விழாவில் பேசியதாவது… தமிழக திரையுலகிலும்,அரசியல் பொது வாழ்விலும்,ஏகசர்க்கரவர்தியாக எவராலும் வெல்ல முடியாத மாபெரும் மக்கள் தலைவராக வாழ்ந்தார் எம்.ஜி.ஆர். ‘ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’’ என்று அவர் பாடிய பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் தான் உழைத்து சம்பாதித்த பொருட்களை எல்லாம் ஏழை-எளிய மக்களுக்கு, பல்வேறு நிறுவனங்களுக்கும் வாரி வாரி வழங்கினார்.

அவரை இன்றளவும் நேசித்து வரும் பல்வேறு தொண்டர்களும், பக்தர்களும் எம்.ஜி.ஆர். வழியில் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். மறைந்து 35 ஆண்டுகளை கடந்த விட்டாலும் அவருடைய புகழும்,பெருமையும்,செல்வாக்கும் கொஞ்சமும் குறையவில்லை. மாறாக அவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. எத்தனை யுகங்கள் ஆனாலும், இந்த உலகம் உள்ளவரை எம்.ஜி.ஆர். புகழ் நின்று நிலைத்திருக்கும். இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.
மேலும் ராமாவரம் தோட்டத்தில் அமைந்துள்ள வாய் பேசாதோர், காதுகேளாதோர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீர்ருடைகளும், நோட்டுபுத்தகங்களும், அவர்கள் பயன்படுத்த பிளாஸ்டிக் வாளிகள் வழங்கினார் சைதை துரைசாமி.
இதில் எம்.ஜி. ஆர். மன்றத்தின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். லாரன்ஸ், நடிகை லதா,பள்ளியின் நிர்வாகி லதா ராஜேந்திரன், சிங்கப்பூர் அருள்மொழி,மலேசிய நாட்டை சேர்ந்த டத்தோ முத்துரத்தினம்,கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர். இறுதியில் மலேசிய நாட்டின் எம்.ஜி.ஆர். இசைக்குழுவினருடைய மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
