தி கோட்: விமர்சனம்

தி கோட்: விமர்சனம்

நேர்மையான அதிகாரி, தப்பு செய்யும் தன் மகனுக்கு ‘தண்டனை’ தரும் அரதப்பழசான, ‘தங்கப்ப –  தக்கம்’ கதைதான். ( இதே வரிசையில் சமீபத்தில் ஜெயிலர் வரை வந்துவிட்டன!)

ஆனால், விஜயகாந்த் மற்றும் சின்ன வயசு விஜயின் வியக்க வைக்கும் ஏ.ஐ.க்கள், ரயில் – ஹெலிகாப்டர் த்ரில்லிங் சண்டை,  பிரசாந்த்தின் நண்பன் கதாபாத்திரம், த்ரிஷா குத்தாட்டம், சிவகார்த்திகேயன் ஜாலி கேமியோ, பிரம்மாண்ட ஐ.பி.எல். கிரிக்கெட்… என்று மசாலாக்களை தூவித் தந்து ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அதிலும், சின்ன விஜய்யின், வில்லனிக் ஆக்சன்கள் அசத்தல். இறுதிக் காட்சியில் அதே பாணியில் பெரிய விஜய் பேசுவது இன்னும் சூப்பர்!வித்தியாசமான டிரீட் தந்து அசத்தி இருக்கிறார் விஜய்.

ஆம்.. ‘பிகில்’ படத்தில் அப்பா, மகன் டபுள் ஆக்டிங் செய்தவர்தான் விஜய். ஆனால் கோட்.. வேற லெவல்.

வித்தியாசமான மாடுலேசன்கள், ரசிக்க வைக்கும் மேனரிசங்கள் என அதிரடி காட்டி இருக்கிறார் விஜய்.

அதே போல ஐம்பதை கடந்த வயதிலும் இளைஞராகவே துள்ளாட்டம் போடுவதும், அதிரடியாக சண்டைக் காட்சிகளில் முத்திரை பதிப்பதும் சூப்பர்!அவரது நண்பர்களாக வரும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரில் பிரசாந்த் முத்திரை பதிக்கிறார். நண்பனுக்காக அவரது மனைவியிடம் வக்காலத்து வாங்குவது… தனது மகள் கொல்லப்பட்ட போது துடிதுடிப்பது என ஈர்க்கிறார் பிரசாந்த்.

பொசசிவ்னஸ் கொண்ட மனைவி, பாசமான அம்மா என சிநேகா ரசிக்கவைக்கிறார்.

வில்லனாக மோகன் என்று தகவல் பரவியபோதே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைந்த தலையுடன் பரிதாப தோற்றம்.. அதிரடி காட்டாத வில்லன் ரோல்… புஸ்…!

மற்றபடி ஜெயராம், லைலா, வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மீனாக்ஷி சௌத்ரி என அனைவருமே அவரவர் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

இரண்டாம் பாதி.. சேசிங், சண்டை, துப்பாக்கி என பரபரப்பாக போகிறது. இந்த பரபரவை கொஞ்சம் தணிக்க யோகி பாபுவின் காமெடி உதவுகிறது.

செல்போனை திருடிவிட்டு அவர் அடிக்கும் லூட்டி… ரசிகர்களை மனம்விட்டு சிரிக்க வைக்கிறது.

படத்தின் பிரம்மாண்டத்தை டபுள் ஆக்கி இருக்கிறது சித்தார்த்தின் ஒளிப்பதிவு. அதுவும் சண்டைக் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் தூள் பரத்தி இருக்கிறது.யுவன் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. அதே போல பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார் மனிதர்.

சின்ன விஜய்யின் டீ-ஏஜிங் காட்சிகள் சிறப்பாகவே வந்திருக்கின்றன. அதே போல விஜயகாந்த் கேமியோவிலும் அசத்தி இருக்கிறார்கள். வி.எப்.எக்ஸ் குழுவுக்குப் பாராட்டுகள்.

நாயகனுக்கு நெருக்கமானவர்களை கடத்தி வைத்துக்கொண்டு வில்லன் மிரட்டுவது ஓல்டு டெக்னிக்… அதையே மறுபடி மறுபடி காண்பிப்பது அலுப்பூட்டுகிறது. அதே போல மனைவிக்கு பயந்தது போல விஜய் நடிக்கும் காட்சிகளும் நிறைய்ய்ய வருகின்றன.. இவற்றைக் குறைத்தால், மூன்று மணி நேர படம் இரண்டரை மணி நேரமாக – க்ரிஸ்பாக – குறையும்.

மொத்தத்தில் படம் ரசிக்கவைக்கிறது… நேரத்தைக் குறைத்தால் இன்னும் ரசிக்கவைக்கும்.

 

Related Posts