நமாஸ், ஜெபம் செய்தாலும் கொரோனா ஓடும்!: மன்னார்குடி ஜீயரின் புது ஸ்டேட்மெண்ட்
சிறப்பு ப்பேட்டி: டி.வி.சோமு
உலகம் முழுவதும் கொரோனா பீதியில், மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். நாளுக்கு நாள், கொரோனா பரவல் அதிகரிக்கிறது. இதில் பலியாவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது.
ஆங்கில, சித்த, ஹோமியோபதி மருத்துவத்தில் உரிய மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
இந்நிலையில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மணவாள மாமுனிகள் மடத்தில், சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “108 முறை ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை, உச்சரித்தாலே கொரோனா ஓடிவிடும். மருந்து, மாத்திரைகள் தேவையில்லை!” என்றார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

“திருவல்லிபுத்தூர் ஜீயர் தவறான தகவலைப் பரப்புகிறார்!” என்று சமூகவலைதளங்களில் பலர், பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், “தவறான கருத்தை வெளிப்படுத்தும் அவரை கைது செய்ய வேண்டும்!” என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்னிலையில், மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயரை தொடர்பு கொண்டு, “திருவில்லி புத்தூர் ஜீயர் சொல்வது சரிதானா?“ என்று கேட்டேன்.
அதற்கு அவர், “சடகோப ராமானுஜ ஜீயர் சொல்வது உண்மையே. ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்துக்கு தனி சக்தி உண்டு. இதை 108 முறை உச்சரிக்கும்போது, மனிதர்களுக்கு இம்யூனிட்டி பவர் (immunity power) அதிகரிக்கும்!” என்றார்.
“நீங்கள் சொல்வதற்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.
அதற்கு, மன்னார்குடி ஜீயர், “நமது பாரம்பரியத்திலேயே ஆதாரம் இருக்கிறது. அம்மை போன்ற நோயகள் தாக்கியவரை தனிமைப்படுத்துவோம் அல்லவா? அதைத்தானே இப்போதுதான் சோசியல்

டிஸ்டன்ஸ் என்கிறார்கள்! நாம் சொல்லும்போது பரிகாசிப்பதும், அதையே வேறு நாட்டவர் சொல்லும்போது ஏற்பதும் நமது பழக்கமாக ஆகிவிட்டது. நமது கலாச்சாரத்தில் சொல்லப்பட்ட சோசியல் டிஸ்டன்ஸை இப்போது அனைவரும் ஏற்றுக்கொள்வதைப்போலவே, மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா ஒழியும் என்பதையும் அனைவரும்ஒப்புக்கொள்வார்கள்!” என்றார்.
நான், “ஓம் நமோ நாராயணா என்பது வைணவர்களுக்கானது. அதை பிறர் உச்சரிப்பது நடக்கக்கூடிய காரியமா?“ என்று கேட்டேன்.
அதற்கு ஜீயர், “எதையும் தவறாக புரிந்துகொண்டால் தவறாகத்தான் தெரியும். சைவர்கள், ‘ஓம் நமசிவாய’ என்றும் சொல்லலாம். அதே போல இஸ்லாமியர்கள் நமாஸ் செய்யட்டும், கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்யட்டும்… எல்லாம் ஒரே பவர்தான். இதில் எதைச் சொன்னாலும் கொரோனாவில் இருந்து விடுபடலாம்! நிச்சயம் கொரோனா ஒழியும்!” என்றார்.