தி அக்காலி : விமர்சனம்
போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க, போலீஸ் அதிகாரி ஜெய்குமார் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்படுகிறது. மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் போலீஸ் குழுவுக்கு கிடைக்கிறது. காவல்துறையினர் மயானத்தை சோதனையிட, பல அதிர்ச்சிகமரான உண்மைகள் வெளியாகின்றன.
அதாவது சாத்தானை வழிபடும் குழுவினர், மயானத்தில் விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும், போலீஸ் அதிகாரி ஜெய்குமாருக்கு தெரிய வருகிறது.
மேலும் அவர்விசாரிக்கும் போது, அந்த கொடூர குழுவின் பின்னணியும் பல மர்ம மரணங்களும் தெரிய வருகிறது.
இறுதியில் அனைத்து மர்ம முடிச்சுகளையும் அவர் எப்படி அவிழ்கிறார் என்பதே மீதிக் கதை. அதே நேரம், ஒரு கமா போட்டு அடுத்த பாகத்துக்கும் அடிபோட்டு இருக்கிறார்கள்.காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்குமார், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், கிறிஸ்துவ மத போதகராக நடித்திருக்கும் நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்துள்ளனர்.
குறிப்பாக பேய் பிடித்தது போல் ஆக்ரோஷமாக இருக்கும் தாரணி, பிளாக் மேஜிக்கால் ஈர்க்கப்பட்ட யாமினி, சாத்தான் குழுவால் பாதிக்கப்பட்ட அர்ஜய், கருப்பு உலகத்தைச் சேர்ந்த வினோத் கிஷன் ஆகியோரின் நடிப்பு மிரட்டல்.
அமானுஷ்ய படத்துக்கு ஏற்ப ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரி முர்பி. கலை இயக்குநர் தோட்டா தரணியும் சிறப்பாக செட்கள் அமைத்து உள்ளார். wfx காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளன. இனியவன் பாண்டியனின் படத்தொகுப்பு படத்துக்கு பலம்.
எழுதி இயக்கியிருக்கும் முகமது ஆசிப் ஹமீத் நரபலியை அடிப்படையாக வைத்து, சஸ்பென்ஸ் குறையாமல் முழு நீள படத்தை அளித்து இருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘தி அக்காலி’ பயமுறுத்துகிறது.