தருணம் : திரை விமர்சனம்

காதலையும், த்ரில்லையும் சம அளவு கலந்து அளித்து ரசிக்க வைக்கும் படம், தருணம்.
சி.ஆர்.பி.எப் சிறப்புக் காவல்துறை அதிகாரி அர்ஜுன், ஒரு தீவிரவத தேடுதல் வேட்டையில் தவறுதலாக தனது சக வீரரை சுட்டுவிடுகிறார். அதனால் இடைநீக்கத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு திருமண விழாவில் மீராவை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. மீராவின் பக்கத்து வீட்டுக்காரர் + நண்பர் ரோஹித்துக்கு இது பிடிக்கவில்லை. அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல ரோஹித்திடம் பழகுகிறார் மீரா.
ஒருநாள் அர்ஜுன் மீராவின் வீட்டிற்குள் வர, சமையலறையில் மீராவின் அருகே பிணமாகக் கிடக்கிறார் ரோஹித்.இதன் பிறகு என்ன நடந்தது என்பதை, திக் திக் தருணங்களாக சொல்லி இருக்கிறார்கள்.
இதுவரை லவ்வர் பாயாகவே வந்த கிஷன் தாஸ், இந்தப் படத்தில் சி.ஆர்.பி.வீரர் அர்ஜூனாக அதிரடி காட்டி இருக்கிறார். கம்பீர தோற்றம், மிடுக்கான மேனரிசம், சண்டை என அசத்துகிறார். அதுவும் கொலை சம்பவ நேரத்தில்கூட, நிதானமாய் யோசித்து, தனது காதலியையும் ஆறுதல்படுத்தி செயல்படும் இடத்தில் சிறப்பாக நடித்து உள்ளார்.
காதலி மீராவாக ஸ்மிருதி வெங்கட் சிற்பாபக நடித்து உள்ளார். கொலையைச் செய்துவிட்ட பதற்றத்தை வெளிப்படுத்துவது, அதன் பிறகு ஒவ்வொரு கணமும் பயந்து நிற்பது என பதட்டத்தை நமக்கும் கடத்திவிடுகிறார்.
நாயகனின் நண்பனாக வரும் பால சரவணன் எப்போதும்போல கலகல. சீரியஸான த்ரில்லரில் இவருது வருகை சற்று பதற்றத்தை குறைக்கிறது.
வில்லன் ரோஹித்தாக வரும் ராஜ் அய்யப்பன், நிஜமாகவே நமக்கு வெறுப்பு வரும்படி சிறப்பாக நடித்து இருக்கிறார்.
சிறிய கதாபாத்திரம் என்றாலும், மகனைக் காணவில்லை என்கிற பதற்றம், சந்தேகம் ஆகியவை சேர உணர்வுபூர்வமான நடிப்பை அளித்து திக் திக் கூட்டுகிறார் கீதா கைலாசம்.
தர்புகா சிவா இசை. ஏற்கெனவே ஓ.டி.டி.யில் வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் (அவரது) இசை சாயல் அப்படியே இதிலும் இருக்கிறது. பின்னணி இசை ஓகேதான்.
ஒரு சில இடங்களைத்தான் கதை சுற்றிவருகிறது என்றாலும், அலுப்பு ஏற்படாத வகையில் வித்தியாசமான கோணங்களால் சுவராஸ்யப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி. அதற்கு ஏற்ப படத்தொகுப்பாளரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
டான் அசோக் மற்றும் சி.பிரபுவின் சண்டைக் காட்சிகள் சிறப்பு. லோக்கல் ரவுடிகள் தங்கள் பாணியில் தாக்க… பயிற்சி பெற்ற சி.ஆர்.பி.எப். வீரரான நாயகன் ‘முறைப்படி’ திருப்பித் தாக்க… அருமையான சண்டைக் காட்சி.
ஒரு அபார்ட்மெண்ட்… அங்கு ஒரு கொலை… தொடர்ந்து ட்விஸ்ட்… இப்படி அசத்தி இருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.
மொத்தத்தில் படம் முடியும் வரை ஒவ்வொரு தருணத்திலும் நம்மை சீட் நுனியில் உட்கார வைத்திருக்கிறார்.
ரசித்து… பயந்து பார்க்கலாம்.