தண்டேல்: விமர்சனம்

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீகாகுளம் என்கிற சிறிய கடற்கரை வசிக்கிறார்கள் மீனவ சமூகத்தைச் சேர்ந்த ராஜுவும் சத்யாவும். இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள்.
ஆண்டின் பெரும்பாலான மாதங்களை கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் ராஜூ மிச்சமிருக்கும் கொஞ்ச நாட்களை தனது காதலியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். எதிர்பாராத ஒரு சம்பவத்துக்குப் பிறகு, ராஜூவை மீன் பிடிக்க போக வேண்டாம் என்று சொல்கிறார் சத்யா. ஆனால் அவள் பேச்சை கேட்காமல் ராஜூ, மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறான்.
அங்கு ராஜூவின் படகு கடும் புயலில் சிக்குகிறது. எல்லை தாண்டி, பாகிஸ்தான் பகுதிக்குச் சென்றுவிடுகிறது. அங்கு அந்நாட்டு பாகிஸ்தான் கடற்படையினரால் ராஜூஉள்ளிட்டோர் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் ராஜூவும் அவனது குழுவும் வாடுகிறார்கள்.இன்னொரு பக்கம், காதலன் ராஜூவை பிரிந்து தவிக்கிறாள் சத்யா.
இருவரும் சேர்ந்தார்களா என்பதே தண்டேல் படத்தின், உருக்கமான கதை.
மீனவர் ராஜூவாகவே, வாழ்ந்திருக்கிறார் நாக சைதன்யா. மீனவர்களை வழிநடத்துவது, தன்னை நம்பி வருவோருக்காக இறுதி வரை நிற்பது, காதல், அதிரடி என அனைத்து விதங்களிலும் அசத்தி இருக்கிறார். அவரது பட வரிசையில் இது மிக முக்கியமான படம்.
சாய் பல்லவி பற்றி சொல்லவே தேவையில்லை. காதல் காட்சிகளிலும் சரி, காதலன் எப்போது திரும்புவான் என சோகத்தை வெளிப்படுத்துவதிலும் சரி சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.
கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு உள்ளிட்ட இதர நடிகர்களும் அற்புதமான நடிப்பை அளித்து உள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அருமை. குறிப்பாக, “நமோ நமச்சிவாயா” பாடல் அட்டகாசம்! அதே போல பின்னணி இசையும் சிறப்பு. கடல் அலைபோல, படம் முழுதும் மனதிற்குள் அலையடிக்கிறது பின்னணி இசை. கடல், கடற்கரை காட்சிகளை கண்முன் நிறுத்தி பிரமிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சாம்தாத்.
மீனவர் சமூக வாழ்க்கை, அவர்கள் படும் சிரமங்கள், மீன் பிடி தொழிலில் சந்திக்கும் சவால்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் சிறப்பாக நமக்கு வழங்கி இருக்கிறார் இயக்குநர், இயக்குநர் சந்து மொன்டட்டி. ராஜு. அதே போல இரண்டாம் பாதியில் பாகிஸ்தானில் நமது மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பதைபதைக்கும்படி சொல்லி இருக்கிறார்.
தண்டேல்- அனைவரும் பார்க்கலாம்.