‘டென் ஹவர்ஸ்’: திரைப்பட விமர்சனம்
இரவு நேரம்… சென்னையில் இருந்து கோவை நோக்கி புறப்படுகிறது ஒரு ஆம்னி பஸ். அந்த பஸ் குறிப்பிட்ட ஊரை கடக்கும் போது, ‘பேருந்தில் பெண் சித்திரவதை செய்யப்படுகிறாள்’ என்று போலீஸூக்கு போன் வருகிறது . உடனடியாக களத்தில் இறங்குகிறார் அந்தப் பகுதி இன்ஸ்பெக்டர். குறிப்பிட்ட பேருந்தை நிறுத்தி சோதிக்கிறார். அங்கு எந்தவொரு பெண்ணும் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரியவில்லை.. ஆனால் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
இன்ஸ்பெக்டர் அந்த பேருந்தை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு வருகிறார். அதில் பயணித்தவர்கள் ஒவ்வொருவரையும் விசாரிக்கிறார். இறுதியில் குற்றவாளி பிடிபட்டானா என்பதுதான் கதை.
முதல் பாராட்டு, சிபிராஜூக்கு.
அவரது உயரமும் உடலமைப்பும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்துக்கு பொருந்தும்தான். ஆனால் இந்தப் படத்தில், அவர் இந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருந்தி வந்திருக்கிறார். எப்போதும் கண்களில் தெறிக்கவிடும் கடமை உணர்வு, சுறுசுறுப்பான சண்டைகள், உடன் பணி புரியும் காவலரை மரியாதையுடன் ‘அண்ணே அண்ணே’ என்று அழைத்து வேலை வாங்குவது என்று அசத்தி இருக்கிறார் சிபிராஜ். தாடியை எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாரோ என்னவோ… சபரி மலைக்கு மாலை போட்டிருப்பவதாக காண்பிக்கிறார்கள். அதுவும் ப்ளஸ் ஆகிவிட்டது. நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு வித்தியாசமான போலீஸ் கெட் அப், சிபிராஜக்கு. அதை சரியாகச் செய்திருக்கிறார். பாராட்டுகள்.
எஸ்.ஐ.மணியாக கஜராஜ்… வழக்கம்போல இயல்பான நடிப்பு.
ஜீவா ரவி, அய்யப்பா, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, ஷர்மிஷா, நிரஞ்சனா என அனைவருமே அவரவர் பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை அளித்து உள்ளனர்.
குறிப்பாக வில்லனாக வரும் அந்த நபர்… அசத்தல்.
ஜெய் கார்த்திக்கின் கேமரா, இரவை – நீள சாலையை – பேருந்து பயணத்தை கண்முன் நிறுத்துகிறது.
கே எஸ் சுந்தர மூர்த்தியின் பின்னணி இசை சிறப்பு.
அருண் சங்கர்துரையின் கலை இயக்கமும் அசத்தல். குறிப்பாக அந்த போலீஸ் ஸ்டேசன்!
த்ரில்லர் படத்தை இன்னும் இறுக்கமாக்கிக் கொடுத்து ரசிக்க வைக்கிறார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்.
அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள், முதல் படத்திலேயே கவனிக்க வைத்துவிட்டார். ஓடும் பேருந்தில் நடக்கும் கொலை…. நிச்சயமாக யாரும் எதிர்பார்க்க முடியாத ட்விஸ்ட் என பயமுறுத்தி இருக்கிறார்.
த்ரில்லர் என்பதோடு மக்களை பாதிக்கும் இரண்டு விசயங்களையும் சொல்லி இருப்பது சிறப்பு.
ரேட்டிங்: 3.3/5
