‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என தமிழ் ZEE5 அறிவிப்பு
தமிழில் ZEE5-ன் பாராட்டைப் பெற்ற பிரபல சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ இப்போது புதிய சீசனுடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகிவிட்டது. முற்றிலும் புதிய வழக்கு மற்றும் சக்திவாய்ந்த கதைக்களத்துடன் இந்தத் தொடர் வரும் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகிறது என தமிழ் ZEE5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் சீசனின் மெகா வெற்றிக்குப் பிறகு இந்த இரண்டாவது சீசன் வருகிறது. பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் பேனரின் கீழ் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இந்தத் தொடர், நீதித்துறை அமைப்பை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான கதையாடலைத் தொடர்கிறது. இதில் புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் ஆழமான தார்மீகக் குழப்பங்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய சீசனின் மிகப்பெரிய ஸ்பெஷல் வரலட்சுமி சரத்குமார் இணைந்திருப்பதுதான். அவரது வலுவான திரை ஆளுமை கதைக்களத்திற்கு அக்மார்க் புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. அதேசமயம், கதையின் மையத்தில் இருக்கும் தனது வழக்கறிஞர் கதாபாத்திரத்தைத் தொடர்ந்து ஏற்று சரவணனும் செம மாஸாக நடிக்கிறார்.
முதல் சீசனில், தன் மகள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தந்தை தீக்குளித்த சம்பவத்தால் உருவான அதிர்ச்சிகரமான வழக்கை சரவணன் எதிர்கொண்டார். ஆரம்பத்தில் எளிமையான விசாரணையாகத் தோன்றிய அந்த வழக்கு, அதிகாரம், செல்வாக்கு மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் பின்னிப் பிணைந்த சிக்கலான வலையாக மாறி நீதிக்கான உறுதியைக் சோதித்தது.
இப்போது சீசன் 2-ல், நீதிமன்றத் தீர்ப்புகளைத் தாண்டி, அதிகாரம், சலுகை மற்றும் தனிப்பட்ட முடிவுகள் எவ்வாறு உண்மையை நோக்கிய பாதையைத் தீர்மானிக்கின்றன என்பதை இந்தத் தொடர் ஆழமாக ஆராய்கிறது. நீதியைத் தேடும் முயற்சியில் தனிநபர்கள் செலுத்தத் தயாராகும் விலையைச் சொல்லும் அதே நேரத்தில், உணர்வுப்பூர்வமாகவும் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் இந்தச் சட்ட நாடகம் அமையும்.
முதல் சீசனின் நேர்மையான மற்றும் யதார்த்தமான கதையாடலைத் தொடரும் இந்த புதிய அத்தியாயம், பார்வையாளர்களுக்கு மேலும் தீவிரமான மற்றும் பரபரப்பான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கான முன்னணி ஓடிடி தளமான ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீசன் 2-ஐ விரைவில் மிஸ் பண்ணாமல் கண்டு மகிழுங்கள்.

