“தமிழ்த் திரைப்படங்களில் தமிழ் வேண்டாம்!”: தணிக்கை வாரியத்துக்கு பத்திரிகையாளர் கோரிக்கை!

திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு முன், புகை – மது விளம்பர வாசகம் மற்றும் படம் திரையிடப்படும் அல்லவா.. அது குறித்து திரைப்பட தணிக்கை மண்டல வாரியத்துக்கு பத்திரிகையாளர் டி.வி.சோமு கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து, “மத்திய அரசின் தமிழ்ப்பற்று!” என்கிற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருப்பதாவது..
“இந்தி தெரியாம ஏன் இந்தியால இருக்கே” என்று ஏர்போர்ட் செக்யூரிட்டியில் இருந்து, மத்திய அமைச்சர்கள் வரை கேட்கிறார்கள்.
ஆனால் ஒரு துறையில், தமிழ்நாடு அரசே செய்யாத அளவுக்கு தமிழ்ப்பணி செய்கிறார்கள், மத்திய அரசு + அதிகாரிகள்!
திரையரங்கில் படத்துக்கு முன்பாக, புகை மது எச்சரிக்கை படம், (தமிழில்) திரையிடப்படுகிறதே, அதில் உதவி எண்களை ‘க அ 00 கக உஙருசா’ என்று வெளியிடுவதை கவனித்து இருக்கிறீர்களா…
பலர் கவனித்து இருந்தாலும், “ஏதோ தப்பா போட்டுருக்காங்க போலிருக்கு” என்று கடந்துவிடுவர்…
அவை, ‘1800 112356 ‘ என்கிற தமிழ் எண்கள்தான்!
எப்போதோ, மத்திய அரசில் பொறுப்பில் இருந்த தமிழ் அதிகாரி, மொழிப்பற்றில் இப்படி பதிந்துவிட்டார் போல… அதுவே இன்றும் தொடர்கிறது.
ஆனால், ஆகப்பெரும்பாலோருக்குப் புரியாது.
சென்னை சென்சார்போர்டு அதிகாரியாக பொறுப்பு வகித்தவரிடம் ஒருமுறை இது குறித்து கேட்டேன்.
அவர், “அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. படத் தயாரிப்பாளர்கள், படத்துடன் சேர்த்தே இதை அனுப்புவார்கள்” என்றார்.
அவ்வப்போது, திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலரிடம் இது குறித்து கேட்பேன். அவர்களும், “அட, ஆமாம்ல.. . மாத்தணும்” என்பார்கள். அத்தோடு சரி. அவர்களுக்கும் ஆயிரம் வேலைகள்.
சில வருடங்கள் கழித்து, மீண்டும் ஒரு முறை சென்சார் போர்டு அதிகாரியிடம் கேட்டேன். அவர், “எங்களது (மும்பை) தலைமை அலுவலகத்திடம் பல முறை தெரிவித்துவிட்டோம்… பலனில்லை” என்றார்.
இந்த சில நிமிட, எச்சரிக்கைப் படத்தைப் பார்த்து எத்தனை பேர் மது – புகையை விடுகிறார்கள் என்பது இருக்கட்டும். ஒரு வேளை, அப்படி முயற்சிக்கிறவர்களுக்கு உதவியாக, பொது எண்களில் (நியூமரிக்கல் நம்பர்ஸ்) பதிவிடுவதுதானே முறை!
தவிர, பத்து எண்களாக இல்லாமல், காவல்துறை, குழந்தைகள் தொடர்பான எண்களைப்போல மூன்று அல்லது நான்கு எண் கொண்டவையாக இருந்தால் நல்லது. மனதில் பதியும். பலருக்கும் பயனாகும்.
ஆனாலும், இதுவரை தமிழ் எண்களை விட்டுவைத்து இருக்கும் மத்திய அரசின், தமிழ்ப் பற்று(!) பாராட்டத்தக்கதே! 🙂” என்று பத்திரிகையாளர் டி.வி.சோமு குறிப்பிட்டு உள்ளார்.
அவரது முகநூல் பதிவு: