முட்டை – மாணவன் – சத்துணவு – தாக்குதல்!: இன்னொரு நடவடிக்கை தேவை!

முட்டை – மாணவன் – சத்துணவு – தாக்குதல்!: இன்னொரு நடவடிக்கை தேவை!
டி.வி.சோமு பக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் செங்குணம் கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

கடந்த ஏப்ரல் 3ம் தேதி, மதிய சத்துணவில் முட்டை வைக்கப்படவில்லை. இது குறித்து  ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால்  ஆத்திரமான  சமையலர் லட்சுமி மற்றும்  உதவியாளர் முனியம்மாள் ஆகியோர் வகுப்பறையில் புகுந்து விளக்குமாறு கொண்டு அந்த மாணவரை கடுமையாக தாக்கினர். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாக்கிய இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சரியான நடவடிக்கை.
இன்னுமொரு நடவடிக்கை மிச்சமிருக்கிறது.
மாணவன் தாக்கப்படும் வீடியோ காட்சி பரவி வருகிறது அல்லவா…
அதில் வகுப்பறையின் கரும்பலைக்கு மேல் அரசியல் தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. சரிதான்…
அதோடு, ‘கடவுள்’ சரஸ்வதியின் படமும் வைக்கப்பட்டு உள்ளது..
அண்ணா அவர்களது தலைமையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, 29, ஏப்ரல், 1968 அன்று இது குறித்த உத்தரவு வெளியானது. அப்போதைய தலைமைச் செயலாளர் சி.ஏ.ராமகிருஷ்ணன் விடுத்த சுற்றிக்கையில், ‘எந்த மத கடவுள்,சாமியார்கள் படங்கள், சிலைகளை அரசு அலுவலகத்தில் வைக்கக்கூடாது’ என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
மேலும், “அரசு அலுவலங்களில் இவை இருக்குமாயின் படிப்படியாக எவ்வித அசம்பாவிதம் நிகழாத வகையில் அகற்ற வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த உத்தரவு, அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்படவில்லை.
1993ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும் அரசு ஊழியர்கள், அலுவலகங்களில் வழிபாடு நடத்துவதை தடை செய்து, அரசாணை வெளியிட்டது.
சரஸ்வதி படம்
1994ல் அப்போதைய மத்திய அரசும், அகில இந்திய அளவில் இது போன்ற உத்தரவை பிறப்பித்தது.
2005ல் காவல்துறை தலைமை இயக்குனர் இலத்திகா சரண், ஒரு சுற்றறிக்கையை காவல் அலுவலர்களுக்கு அனுப்பினார். அதில், “உண்மையான பணி செய்யக் கூடிய அரசு அலுவலக வளாகமே வணங்கத்தக்கது என்பதால், தனியாக வழிபாடு தேவையற்றது” என்று குறிப்பிட்டார்.
ஆனாலும் பயனில்லை. காவல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கடவுள் படம் வைப்பது, வணங்குவது, ஆயுத பூஜை உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பது தொடர்ந்தது.
இதற்கிடையே, கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம் அரசு உயர் அதிகாரிகளுக்கு கடிதங்கள் எழுதியது, உயர் நீதி மன்றத்தில் வழக்க தொடர்ந்தது, போராட்டம் – ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
ஆனால்… இதோ நேற்று முன்தினம் வெளியான அந்த வீடியோவில்.. வகுப்பறையில் கடவுள் சரஸ்வதியின் படம் மாட்டப்பட்டு இருக்கிறது.
இது குறித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– டி.வி.சோமு

Related Posts