சுமோ: திரைப்பட விமர்சனம்

கடற்கரையோரம் ரெஸ்டரன்ட் ஒன்றை நடத்தி வருகிறார் விடிவி கணேஷ். அங்கு வேலை பார்க்கிறார் ஹீரோ மிர்ச்சி சிவா. இவர், சர்பிங் (கடல் சறுக்கு) விளையாட்டோடு, ஹீரோயின் பிரியா ஆனந்தை காதலிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
ஒரு நாள் இவர் கடலுக்குச் செல்லும்போது, கரை ஒதுங்கிக் கிடக்கிறது…. இல்லை, கிடக்கிறான் ஒரு மாமிச மலை! அதை பா பார்த்து அதிர்ச்சியாகும் சிவா, நெருங்கிப் பார்க்கிறார். அந்த மாமிச மலைக்கு உயிர் இருப்பதை அறிந்து முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். அந்த மாமிச மலை, ஆங்குதோங்காக இருந்தாலும் மனதில் குழந்தை மாதிரி. எப்போதும் குச்சு மிட்டாய் சாப்பிட்டுக்கொண்டு, சிவாவின் கையைப் பிடித்துக்கொண்டே அலைகிறது.ஒரு கட்டத்தில் அந்த நபர், ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அறிகிறார் சிவா. ஆகவே அந்த நபரை ஜப்பானுக்கு அழைத்துச் செல்கின்றனர் சிவாவும், விடிவி கணோசும்.
அங்கே அவர்களைக் கொல்ல திட்டமிடுகிறார்கள் ஜப்பானிய வில்லன்கள். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.
‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா, வழக்கமான தனது பாணியில் கலக்கி இருக்கிறார். காதலி, கடை ஓனர், ஜப்பானிய வில்லன்கள் என அனைவரையும் கலாய்க்கிறார். அதே நேரம், குழந்தை போன்ற அந்த சுமோ வீரரை பாசத்துடன் கவனித்துக்கொள்வதிலும் கவனம் ஈர்க்கிறார்.
மாமிச மலை குழந்தையாக.. பிறகு சுமோ வீரராக வரும் யோஷினோரி தஷிரோ, சிறப்பாக நடித்து உள்ளார். இடைவேளை வரை குழந்தையைப் போல வரும் இவர், பிறகு சுமோவில் அதிரடி காட்டுவது சிறப்பு.
ஹீரோயின் பிரியா ஆனந்த் வழக்கம் போலத்தான். காதலனை எண்ணி உருகுவது, அவனது முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என தவிப்பது… இப்படி!
ரெஸ்டாரெண்ட் ஓனராக வந்து கலக்குகிறார் வி.டி.வி. கணேஷ். ஓட்டலில் இருக்கும் உணவை எல்லாம் அந்த மாமிச மலை, தின்று தீர்த்துவிட.. கஸ்டமர்கள் கூப்பாடு போட… இவர் தவிக்கும் ஒரு காட்சி போதும் உதாரணத்துக்கு!
யோகிபாபுவும் உள்ளேன் அய்யா என வந்து போகிறார். சிரிக்கவைக்கவில்லை.
நிழல்கள் ரவி, சதீஷ் உள்ளிட்டோர் சிரிக்கவைக்க முயற்சிக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். அதே நேரம், பின்னணி இசை சிறப்பு. அதுவும் சிவா – ப்ரியாவின் காதல் காட்சிகளிலும், அந்த மாமிச மலை நபரும் சிவாவும் வரும் காட்சிகளிலும் கூடுதலாக ரசிக்கவைக்கிறது.ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்திருப்பதாக டைட்டில் கார்டில் பார்த்த நினைவு.
பிரவின் கே.எல். எடிட்டிங் செய்திருக்கிறார். கச்சிதம்.
இந்திய கடற்கரையில் ஆரம்பித்து ஜப்பான் வரை சென்று சிரிக்க – ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் எஸ்பி.ஹோசிமின். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் காதல், சென்டிமெண்ட், சண்டை என அனைத்தையும் சரிவிகிதம் கலந்து ரசிக்க வைக்கிறார்.
ரசித்துப் பார்க்கலாம்.
ரேட்டிங்: 2.9/5