சொப்பன சுந்தரி -விமர்சனம்

சொப்பன சுந்தரி -விமர்சனம்

இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் சொப்பன சுந்தரி. இந்த படத்தில் லட்சுமி பிரியா, தீபா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நாயகியின் அண்ணன் குடும்பத்தை கவனிக்காமல் தனிக்குடுத்தனம் சென்று விட தாய், மாற்றுத் திறனாளி அக்கா, படுத்த படுக்கையாக இருக்கும் அப்பா என குடும்பத்தை கவனித்து கொள்ள  வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஏழ்மையான குடும்பம் ஆனால் சுமைகளை அதிகம் சுமக்கும் பொறுப்பில் இருக்கும் நாயகி நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் 10 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு கொடுக்க  நினைக்கிறது நிர்வாகம்.

முதல் பரிசாக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார்  பரிசு கிடைக்கிறது. வறுமையில் இருக்கும் குடும்பம் என்பதால் வாய் பேச முடியாமல் இருக்கும் தனது  அக்காவுக்கு அந்த காரை வரதட்சணையாக  கொடுத்து திருமணத்தை நடத்தி விடலாம் என முடிவு செய்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த சூழ்நிலையில் அந்த கார் எனக்கு தான் சொந்தம் என ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் கருணாகரன் வருகிறார். இதனால் காவல் நிலையம் வரை குடும்ப பிரச்சனை செல்கிறது. இறுதியில் என்ன ஆனது அந்த கார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு  கிடைத்ததா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் பெயர் கொஞ்சம் ஒரு மாதிரி தோன்றினாலும் அந்த பெயரில் ஒரு காரை வைத்து படம் முழுவதையும் விறுவிறுப்பாக கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குனர் சார்லஸ் முயற்சி செய்திருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றாலே ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும்தான். கதைக்கு ஏற்றது போல மிக சாதாரண பெண்ணாக  நடித்து அந்த கதாபாத்திரமாகவே  வாழ்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள், எமோஷன் என அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.

நடிகை லட்சுமி பிரியா மற்றும் தீபா தங்களின் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தம். குறிப்பாக அவர்கள் இருவரும் சேர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து செய்யும் அனைத்து காட்சிகளும் சிரிக்கவும் ரசிக்க வைக்கிறது.

மைம் கோபி, கருணாகரன், போலீஸ் அதிகாரியாக வரும் சுனில் குமார் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். 

ஒரு சாதாரண கதை என்றாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்று படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். 

– யாழினி சோமு

Related Posts