மாமன்: திரை விமர்சனம்
குறிஞ்சி மாதிரி பூத்திருக்கிறான் மாமன்.
திருச்சி மாவட்டத்தில் இனிப்பு பலகார நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூரி. தந்தையை இழந்தவர். அவருக்கு, அக்கா சுவாசிகா மீது அத்தனை பாசம்.
சுவாசிகா அதே ஊரில் வாழ்க்கைப்பட்டு இருக்கிறார். திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத அவரது மனதை, உற்றாரும் உறவினரும் காயப்படுத்துகின்றனர்.
இந்நிலையில், கருவுறும் சுவாசிகாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை மீது அதீத பாசத்தைக் காட்டுகிறார் தாய் மாமன் சூரி. குழந்தையை குளிக்கவைக்கிறது, தோளிலே தூக்கியே வளர்ப்பது, பள்ளிக்குச் சென்றுவிடுவது என்று நேரத்தை செலவழிக்கிறார்.
இதற்கிடையே சூரிக்கும் டாக்டர் ஐஸ்வர்யா லெட்சுமிக்கும் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிகிறது. அதன் பிறகும் தன் அக்காள் மகன் (பிரகீத் சிவன்) மீது குறையாத பாசத்துடன் நேரத்தை செலவழிக்கிறார் சூரி. இது கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் சூரியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் அக்காள் சுவாசிகாவுக்குமான பிரச்சினையாக உருமாறுகிறது.
அதைத் தொடர்ந்து வரும் உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் மீதிக்கதை.
உறவுகளிடம் அன்பு, அக்காவிடம் அன்பையும் தாண்டிய பாசம், மனைவியிடம் காதல்… எல்லாவற்றும் மேலாக அக்காள் மகன் மீது காண்பிக்கும் ஆழமான நேசம் என அசத்துகிறார் சூரி. அதிரடி சண்டைக் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். ஒரு காலத்தில் அப்பாவி நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றியவரா இவர் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது.
படத்தின் நாயகியைவிட சூரியின் அக்காவாக வரும் சுவாசிகாதான் கவனத்தை ஈர்க்கிறார். குழந்தை இல்லாத ஏக்கம், தம்பி மீதான பாசம், மகனை பிறர் பழிப்பதை பொறுக்காத ஆவேசம் என நடிப்பு அரசி என நிரூபிக்கிறார். தம்பியிடம், “நீ என் அப்பாடா” என்று சொல்லும் காட்சியில் கலங்கவைத்து விடுகிறார்.
சூரியின் காதலி – மனைவியாக வரும் ஐஸ்வர்யா லெட்சுமியும் சிறப்பாக நடித்து இருக்கிறார். “வாப்பா.. போப்பா” என சூரியிடம் காட்டும் நேசம், அதே சூரி தான் சொல்வதைக் கேட்வில்லை என்றதும் வெளிப்படுத்தும் ஆவேசம் என அசரடிக்கிறார்.
சிறுவன் பிரகீத் சிவனிடம் சிறப்பான நடிப்பை பெற்று இருக்கிறார் இயக்குநர்.
தம்பதிகளாக வரும் ராஜ் கிரண், விஜி சந்திரசேகர் ஆகியோர் நெகிழ வைக்கிறார்கள்.
பாபா பாஸ்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட மற்றவர்களும் பாத்திரம் அறிந்து நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
கிராமத்து அழகை இயல்பை அப்படியே கொண்டுவந்திருக்கிறார்ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்,
படத்தொகுப்பாளர் கணேஷ் சிவாவின் கச்சிதமான எடிட்டிங் பாராட்டு பெறுகிறது.
ஹெஷாம் அப்துல் வஹாப் இசையில் நிறைய பாடல்கள்.
சூரியின் பாசம், குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்சினைகள், குழந்தை இல்லாத அக்கா, பிறகு கருவுற்று பிள்ளைப்பேறு அடைவது என சம்பவங்களை சுவாரஸ்யமாகவே தருகிறது படம். இடைவேளைக்கு சற்று முன் தீவிரமடைந்து மெயின் கதைக்குள் புகுந்துவிடுகிறது.
இரண்டாம் பாதி முழுக்க,நம் முழு கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது திரைக்கதை.
வழக்கமான காதல், மோதல்.. அல்லது மசாலா அதிரடி என்று இல்லாமல் இயல்பான மனிதர்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறது மாமன் திரைப்படம்.
கதை எழுதிய சூரியும் அதை அழகாய் அளித்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜூம் பாராட்டுக்கு உரியவர்கள்.
அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
