Devil’s Double Next Level : திரை விமர்சனம்
யு டியுபர் சந்தானம் கிஷா என்ற பெயரில் திரைப்படங்களை கடுமையாக விமர்சித்து அதகளம் செய்கிறார். இவரது மற்றும் இவரைப் போன்றவர்களின் விமர்சனங்களால் படங்கள் தோல்வி அடைவதாக திரைப்பட தரப்பு கொதிக்கிறது.
இந்நிலையில் சினிமா இயக்குனர் ஒருவர், சிலரால் கொல்லப்படுகிறார். அவரோ ஒரு தியேட்டரில் பேயாக புகுந்துகொண்டு, பல விமர்சகர்களை ஸ்பெஷல் ஷோ என்று அழைத்து கொல்கிறார்.
அப்படி சந்தானம் குடும்பத்தை அந்த தியேட்டருக்கு வரவைத்து எல்லோரையும் திரையில் ஓடும் படத்தில் சிக்க வைக்கிறார்.
அந்த படத்தில் சைக்கோ கில்லர், பேய் என பல கதாபாத்திரம் வர, அவர்களிடமிருந்து சந்தானம் தப்பித்து, தன் குடும்பத்தை காப்பாற்றி, அந்த படத்திலிருந்து ரியல் உலகிற்கு மீட்டு வந்தாரா என்பதே மீதிக்கதை.
தனது பேய் மற்றும் காமெடி வரிசையில் அடுத்த படத்தை அளித்து இருக்கிறார் சந்தானம். ஆகவே அதே பாணி நடிப்புதான். ஆனாலும் மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி என கூட்டணி அமைத்து சிரிக்க வைக்கிறார்.
முதல் பாதியில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் தாய் மொழியை மொழி பெயர்ப்பு செய்யும் இடம், மஞ்சுமல் பாய்ஸ் ரீகிரியட் சீன், இரண்டாம் பாதியில் பேய் மற்றும் அடியாட்களிடம் சிக்காமல் ‘நிழல்கள்’ ரவியை பேய் புத்தகததை படிக்க வைக்கும் காட்சிகள் என வரிசையாக நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.
தவிர, லொல்லு சபா மாறன், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி என அனைவருமே காமெடியில் கலக்கி இருக்கின்றனர்.
அதே நேரம், கஸ்தூரி, யாஷிகா ஆகியோர் காமெடி என்கிற பெயரில் அடல்ட்ஸ் ஒன்லி கொஞ்சம் ஓவர்.
தொழில்நுட்ப ரீதியாக அசத்தி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். படம் – படத்துக்குள் படம் என சிக்கலான திரைக்கதைக்கு ஏற்ற வித்தியாசமான ஒளிப்பதிவு. பாடல்கள் ஓகே ரகம். ஆனால் பின்னணி இசை, படத்துக்கு பலம்.
மொத்தத்தில், ஜாலியாக ரசித்துவிட்டு வரலாம்.

