‘ஜோரா கைய தட்டுங்க’!: திரைப்பட விமர்சனம்
மேஜிக் நிபுணரான தனது தந்தையிடம் இருந்து அரைகுறையாக மேஜிக் கற்றுக் கொள்கிறார் சிறுவன் யோகி பாபு. வளர்ந்த பிறகு வேறு வழி இன்றி அதையே பிழைப்பாக வைத்துக் கொள்கிறார். ஒரு மேஜிக் ஷோ நடத்தும் பொழுது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தைக்கு ஆபத்து ஏற்பட.. பொதுமக்கள் மற்றும் போலீஸார் டின் கட்டிவிடுகின்றனர்.
இன்னொரு பக்கம், யோகிபாபுவின் வீட்டிற்கு அருகே இருக்கும் ‘அருவி’ பாலா உள்ளிட்ட இளைஞர் கும்பல், யோகி பாபுவை டார்ச்சர் செய்துகொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் யோகிபாபு எதிர்த்து நிற்க, அவரது கையை வெட்டச் சொல்லி ஆள் வைக்கிறது அந்த கும்பல். அடுத்து அந்த கும்பலின் தலைவன் மர்மமாக இடுகாட்டில் இறந்துகிடக்கிறான்.
இன்னொரு பக்கம், யோகிபாபுவை காணவில்லை.
இதற்கிடையே, அவரை காதலித்த பெண்ணும் தேடுகிறார்கள்.
அடுத்தடுத்து இரு கொலைகள் நடக்கின்றன.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
கோலமாவு கோகிலா படத்தில் சிறப்பான காமெடி – மண்டேலா படத்தில் சிறப்பான கேரக்டர் ரோல் என அசத்தியவர் யோகிபாபு. ஆனால் இந்தப் படத்தில் முடிந்த அளவு சிரிக்க, ரசிக்க வைக்கிறார்.
இனியாவது, கால்ஷீட் கேட்பவர்களிடம், நல்ல கதை வைத்திருக்கிறார்களா என்பதை யோகிபாபு கேட்க வேண்டும். அவரிடம் கால்ஷீட் கேட்பவர்கள், கொஞ்சமாவது கதை, திரைக்கதையை யோசிக்க வேண்டும்.
இரண்டும் இல்லாததால் யோகிபாபுவின் நடிப்பு அவ்வளவாக எடுபடவில்லை.
அவரது காதலியாக வருகிறார் சாந்தி ராவ். யோகிபாபு மீது காண்பிக்கும் ஆர்வம், அவரை காணாமல் தவிக்கும் சோகம் என ஈர்க்கிறார்.
வில்லன்களாக அருவி பாலா உள்ளிட்டோர் சிறப்பாகவே நடித்து உள்ளனர்.
ஒளிப்பதிவு: மது அம்பாட். யோகிபாபுவின் காட்டு வீட்டை ரசிக்கும்படி அளித்து இருக்கிறார்.
அருணகிரி இசையில் பாடல்கள் ஓகே ரகம். ஜித்தின் ரோஷனின் பின்னணி இசையும் அதே ரகம்.
யோகி பாபு கதையின் நாயகன்… அதோடு மேஜிக் நிபுணர்… கொண்டாட்டமாக எடுக்க வேண்டிய கான்செப்ட்.ஆனால் கொலை, த்ரில் என்று கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், ஏனோதானோ திரைக்கதையினால் அவ்வளவாக ரசிக்கமுடியாமல் செய்துவிடுகிறார் மலையாள இயக்குனரான வினீஷ் மில்லினியம்.
ஆனால் கோடை கால விடுமுறைக்கு ஏற்ற யோகிபாபு படம் என்கிற அளவில் ரசிக்கலாம்.
