சூது கவ்வும் 2 : திரை விமர்சனம்
நலன் குமரசாமி இயக்கத்தில் 11 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் அடுத்த பாகம், இது. அதில், கொள்ளையடிக்கும் ‘கொள்கை’ உள்ளிட்ட விஜய் சேதுபதி அண்ட் கோவின் டார்க் காமெடி உதவியது. ஆனால் இதில் அப்படி ஏதும் இல்லாமல் முதல் பாக கதையையே கொஞ்சம் மாற்றி படமாக்கி இருக்கிறார், அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன்.
பல வருடங்களாக கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரானுக்கு (வாகை சந்திரசேகர்) திடீரென நினைவு திரும்புகிறது. தனது கட்சியைச் சேர்ந்த சத்யசீலன் ( ராதாரவி) ஊழல் ஆட்சி நடத்துவதைக் கண்டு நொந்துபோகிறார். அவரது ஊழல் அமைச்சரவையில், தனது விசுவாசியும் நேர்மையானவருமான ஞானோதயத்தின் (எம்.எஸ்.பாஸ்கர்) மகன் அமைச்சர் அருமை பிரகாசம் (கருணாகரன்) நம்பர் ஒன் இடத்தில் இருப்பதையும் அறிகிறார்.
இதையடுத்து கண்ணபிரான் சத்யசீலனுக்கு எதிராகக் கட்சி ஆரம்பிக்கிறார் . ஆனால், முதலமைச்சர் கண்ணபிரானிடம், அமைச்சர் அருமைப்பிரகாசம், ‘கேம் ஆப்’ மூலமாக மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை அள்ளலாம் என்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்போது, குருநாத்தும் (மிர்ச்சி சிவா) அவர் கும்பலும் அவரைக் கடத்துகிறது.
இதற்கிடையே குருநாத்தைப் பிடிக்க அலைகிறார் போலீஸ் அதிகாரி பிரம்மா (யோக் ஜேபி).
இவர்களுக்குள் நடக்கும் களேபரங்கள்தான் கதை.
குருநாத் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா, தனது வழக்கமான நடிப்பையே வழங்கி, சிரிக்க வைக்கிறார். எப்போதும் அவரை மது மற்றும் புகையுடன் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கற்பனை காதலி ஹரிஷாதன் பங்குக்கு கொஞ்சம் காமெடி பண்ணுகிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் கருணாகரனுக்குக் கதையில் முக்கியத்துவம் இருப்பதால், ரசிக்க வைக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதாரவி, சிவாவுடன் வரும் கல்கி ராஜா, ‘நக்கலைட்ஸ்’ கவி, போலீஸ் அதிகாரி யோக் ஜேபி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். கதைக்கும் திரைக்கதைக்கும் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால், படம் ரசனையாக இருந்திருக்கும்.
எட்வின் லூயிஸ் விஸ்வநாத்தின் பின்னணி இசை ரசிக்கவைக்கிறது. கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக அந்த வெள்ளை அறை காட்சி அசத்தல்.
அரசியல் நையாண்டியுடன் தொடங்கும் படத்தில், கற்பனை காதலி உட்பட முந்தைய படத்தின் சாயலிலேயே பல காட்சிகள் இருந்தாலும் துவக்கத்தில் சில இடங்களில் டார்க் காமெடி நன்றாகவே ஒர்க் ஆவுட் ஆகியிருக்கிறது. போதையில்லை என்றால் பாம்பு தெரிவது, பணம் வழங்குவதற்கு கேம்ஆப், வெள்ளை நிற சித்திரவதை அறை, கண்ணுக்குத் தெரியாத காதலிக்கு குண்டு பாய்ந்ததாக மருத்துவமனை செல்வது என சில ஐடியாக்கள் ரசிக்க வைக்கின்றன.
முதல் பாகம் போலவே லாஜிக் பார்க்காமல், ஜாலியாக கொண்டாட வேண்டிய படம்.
