“விமர்சனங்களை பார்க்க மாட்டேன்!”: ‘சைலண்ட்’ பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி!

“விமர்சனங்களை பார்க்க மாட்டேன்!”:  ‘சைலண்ட்’ பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி!

எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டூடியோஸ் சார்பில், எஸ்.ராம் பிரகாஷ் தயாரிக்க,  கணேஷா பாண்டி இயக்கத்தில், டி. சமய முரளியின் திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம், “சைலண்ட்”.  படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர் சீனு ராமசாமி, “உண்மையில் இது ஆச்சரியமான மேடை. ஒரு நியூஸை இரண்டு பி ஆர் ஓவிற்கு அனுப்பினால், அது பத்திரிக்கையில் வராது. ஆனால், இந்த மேடையில், அனைத்து பி ஆர் ஓக்களும் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. ஹேமானந்த் அழைப்பின் பேரில்தான் இந்த விழாவிற்கு வந்தேன். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.சைலண்ட் என ஒரு ஆங்கில படம் பார்த்தேன், அந்த மாதிரி படமாக இருக்குமென நினைத்து வந்தேன். ஆனால் இந்தப்படம் மிகப்பெரிய விசயத்தைப் பேசுகிறது. திருநங்கையை வைத்து எந்த ஒரு இயக்குநரும் இவ்வளவு தைரியமாக முதல் படம் செய்ய மாட்டார்கள். நானும் என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன். இவர்கள் அதே போல் மிகவும் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.

நான் சிறு வயதிலிருந்தே விமர்சனம் பார்த்து படம் பார்க்க மாட்டேன் யார் சொல்லும் விமர்சனத்தையும் கேட்க மாட்டேன். பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் படிப்பேன், தியேட்டரில் படம் பார்த்த பிறகு தான் விமர்சனம் படிப்பேன். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை சிறு முதலீட்டு படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான். ரிவ்யூ இல்லாததால் சின்ன படங்கள் வருவதே தெரியவில்லை. மக்கள் கருத்தை வாங்கி ஒளிபரப்ப மீடியாக்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து சிறு படங்களுக்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.

Related Posts