அஸ்திரம்: திரைப்படவிமர்சனம்

அஸ்திரம்: திரைப்படவிமர்சனம்

தமிழ் திரையுலகில் கிரைம் த்ரில்லர்களுக்கு குறைவே இல்லை. ஆனால் லாஜிக்குடன் இருக்கின்றனவா என்பதுதான் கேள்வி.

ஆகப்பெரும்பாலும் லாஜிக்குடன் – நம்பகத்தன்மையுடன் – மிரட்டுகிறது அஸ்திரம்.

கொடைக்கானல் பகுதியில், காவல் ஆய்வாளராக பணி புரிகிறார்  அகிலன். செயின் பறிப்பு கொள்ளையன் ஒருவனை பிடிக்க போகும்போது, யாரோ ஒருவன் தோள்பட்டை சுட அதனால் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார்.அப்போது அவரிடம் புதிய வழக்கு ஒன்று வருகிறது.  தொடர்ந்து மூன்று பேர், தங்கள்  வயிற்றை கிழித்துக்கொண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரே மாதிரியான மரணம் என்றாலும், இவர்களுக்குள் எந்தவித தொடர்பும் இல்லை.

கான்ஸ்டபிளை உதவிக்கு வைத்துக்கொண்டு, குற்றவாளியைத் தேடி விசாரணையைத் துவங்குகிறார் காவல் ஆய்வாளர் அகிலன்.

இந்த நிலையில்,  மரணமடைந்தவர்களுக்கு இடையே ஒரே ஒரு தொடர்பு இருப்பது தெரியவருகிறது.

அப்போது அகிலனை  சின்ன வயது வகுப்புத்தோழன் பார்க்க வருகிறார்.  அவர்,அவர் மூலமாக சில, பல அதிர்ச்சிகள்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது சுவை குன்றாமல் சொல்லி இருக்கிறார்கள்.ஒரு சரியான க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கிறது இந்தப் படம்.   ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகவே கதை நகர்கிறது. பிறகு மெல்ல மெல்ல வேகம் பிடித்து..  அடுத்த விநாடி என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.

ஷாம் ஒரு நிஜ போலீஸ் அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார். அவரது உடற்கட்டும், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு குற்றத்தின் பின்னணியைத் தேடி அலைவதும் சிறப்பு. குறிப்பாக, விசாரணை அதிகாரியின் ஆணவப் பேச்சைக் கேட்டு முகத்திலேயே ஆத்திரத்தையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்துவதும் குற்றவாளியை நெருங்கும் வேளையில் பொறுப்பிலிருந்து மேலதிகாரி தன்னை விடுவிக்கும்போது அவர் வெளிக்காட்டும் வேதனை உணர்ச்சியும் சிறப்பு!

ஷாமின் உதவியாளராக – கான்ஸ்டபிளாக – வரும் புதுமுக இளைஞர் ஆரம்பத்தில் அந்நியமாகத் தெரிந்தாலும், போகப்போக மனதில் பதிகிறார்.

மனோதத்துவ நிபுணராக நிழல்கள் ரவி வழக்கம்போல் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஃபிளாஷ் பேக்கில் வரும் வில்லனின் தந்தை ஜீவா ரவியும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்.

உளவியல் பிரச்சினைக்கு ஆளான வில்லன் விதேஷ், சின்ன வயது வில்லன் விதேஷ் ஆனந்த் இருவருமே மிரட்டுகிறார்கள்.

இவர்களுடன் ஒரு சிறிய வேடத்தில்.. ஆனால் கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரத்தில் –  வந்து போகிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.

சுந்தரமூர்த்தியின் மிரட்டலான பின்னணி இசை, படத்திற்கு பலம்.  பயத்தை அதிகரிக்க உதவுகிறது அந்த அதிரடி இசை.

வெங்கட்ராமனின் ஒளிப்பதிவும் சிறப்பு.  கொடைக்கானல் மலையின் பசுமையை இரவின் திகிலை கண்முன் நிறுத்தி நடுங்க வைக்கிறது.

மன்னர் காலத்து சம்பவங்கள், வசிய முறை குறித்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் தற்காலத்துடன் இணைத்து சூப்பரான த்ரில்லரை அளித்து  இருக்கிறார்  அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இறுதிக் காட்சி வரை, திகிலாக உட்கார வைத்து இருக்கிறார்.

மொத்தத்தில்… பார்த்து, ரசித்து, பயப்படலாம்!

ரேட்டிங்:  3.5/5

 

 

 

Related Posts