‘செருப்புகள் ஜாக்கிரதை’: விமர்சனம்: சிரிக்கவைக்கும் சீரிஸ்! 

‘செருப்புகள் ஜாக்கிரதை’: விமர்சனம்: சிரிக்கவைக்கும் சீரிஸ்! 

ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் விவேக் ராஜகோபால்,விவேக் ராஜகோபால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது ‘செருப்புகள் ஜாக்கிரதை’ வெப்சீரிஸ்

கதை:

விலை உயர்ந்த வைரக் கற்களை, தனுது செருப்பில் வைத்து கடத்துகிறார் ஒரு ஆசாமி.  அவரை போலீஸ் உளவாளி ஒருவர் பின் தொடர்கிறார்.  இதை அறிந்த அவர், கடற்கரை பகுதியில் வாக்கிங் வரும் தனது நண்பர் சிங்கம் வலிய நின்று பேச்சுக்கொடுக்கிறார். பிறகு, “நான் ஸ்டார் ஓட்டல் பார்ட்டி ஒன்றுக்குச் செல்ல வேண்டும். அங்கே இது போன்ற சாதாரண செருப்பை அணிந்து செல்ல முடியாது. உன் ஷூவை கழற்றி கொடு. நான் ஓட்டலுக்கு போய்விட்டு உன் வீட்டுக்கு வந்து உன் செருப்பை தருகிறேன்.. அதுவரை என் செருப்பை நீ போட்டுக்கொள்” என்கிறார்.

செருப்புகள் கால் மாறுகின்றன.

பின் தொடர்ந்த போலீஸ் உளவாளிக்கு செருப்புகள் கால் மாறியது குறித்து தெரியவில்லை. ஆனாலும் ஏதோ நடந்திருக்கிறது என்பது புரிகிறது. ஆகவே சிங்கம்புலியை பின் தொடர்கிறார்.

வீட்டுக்கு வரும் சிங்கம்புலி, அந்த செருப்பை, வழக்கமாக செருப்பைவிடும் இடத்தில் விடுகிறார். கொஞ்ச நேரத்தில் செருப்பை காணவில்லை.

அவருடைய மகன் விவேக் ராஜகோபால் வேலைக்காரனான லொள்ளு சபா மனோகரனுக்கு அந்த செருப்பை அன்பளிப்பு செய்துவிட்டது தெரிகிறது.

உடனே இருவரும் மனோகரை தேடி ஓடுகிறார்கள்.  அவரோ ஓவர் போதையில், பார் ஒன்றில் நிதானமில்லாமல் இருக்கிறார். செருப்பு குறித்து ஏதேதோ உளறுகிறார். ஒருவழியாக,  கவுன்சிலர் வீட்டுக்கு தான் காலையில் சென்று வந்ததாகவும் அங்கே விட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்.

இதையடுத்து  அங்கு சென்றால்.. கவுன்சிலர் மரணடைந்து பிணமாக உட்காரவைக்கப்பட்டு இருக்கிறார்.  ஏகப்பட்ட கூட்டம்.. ஏகப்பட்ட செருப்பு…

இப்படி சிங்கம் புலியும் அவரது மகனாக வரும் விவேக் ராஜகோபாலும் ஒரு செருப்புக்காக எப்படி செருப்பாய் செருப்பு.. ஸாரி, சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.

வைரங்கள் மறைத்து வைக்கப்பட்ட செருப்பு அவர்களுக்குக் கிடைத்ததா.. அல்லது போலீஸ் கைப்பற்றியதா என்பதுதான் மீதிக்கதை.

நடிப்பு:

காமெடி கேரக்டரில் நடித்துக்கொண்டு இருந்த சிங்கம் புலி இடையில், மகாராஜா படத்தில் நெகட்டிவ் ரோலில் மிரட்டினார். இந்த சீரிஸ் மூலம் மீண்டும் காமெடிக்கு திரும்பி இருக்கிறார். வழக்கம்போல தனது மாடுலேசன், பாடி லேங்குவேஜில் சிரிக்க வைக்கிறார்.

அவரது மகனாக வரும் விவேக் ராஜகோபால் ஓகே ரகம்.  லொள்ளு சபா மனோகர் சாதாரணமாகவே நீட்டி முழக்குவார்.. இதில் குடிகார கேரக்டர் வேறு… கேட்கவா வேண்டும்!

இந்த மூவர் தவிர,  போலீஸ் உளவாளியாக வரும் உசைன்,  இந்திரஜித், மாப்ள கணேஷ் உள்ளிட்ட அனைவருமே ஜாலி ஜோலி நடிப்பில் ரசிக்கவைக்கிறார்கள்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டும்  ஓகே ரகம்.

சீரிஸ் எப்படி:

செருப்பைத் தேடி இருவர் அலையும் கதைதானே என்று தோன்றினாலும் அடுத்தடுத்த முடிச்சுகளை வைத்து சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.  தவிர செருப்பு கிடைக்குமா.. யாருக்குக் கிடைக்கும் என்கிற சஸ்பென்ஸையும் கொண்டு செல்கிறார்கள்.

ஆகவே ரசித்துப் பார்க்கலாம்..!

 

 

Related Posts