சீமான் அறிக்கையில ‘அந்த’ விசயங்கள் மிஸ்ஸிங்.. கவனிச்சீங்களா?

மார்ச் 8 – பெண்கள் தினத்தை முன்னிட்டு, நாதகவின் சீமான் வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான இரு விசயங்கள் விடுபட்டு உள்ளன. இது அவரது நிலைபாடு என்ன என்பதை மிக வெளிப்படையாக காட்டுகின்றன.
பெண்கள் தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமானும் வருடா வருடம் அறிக்கை வெளியிடுவார். ஆனால் இன்று ( மார்ச் 8 ) காலை பத்து மணி வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.
சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார், அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டிகளால் சர்ச்சை என தொடர்ந்து நாதக முகாம் பரபரப்பாகக் கிடந்தது. “செய்தியாளர் சந்திப்பில், கட்சி மகளிரை உடன் வைத்துக்கொண்டே சீமான் ஆபாசமாகப் பேசுகிறார்” என்றும் விமர்சனம் எழுந்தது. அதன் பிறகு, மகளிர் இன்றி, ஆண் தொண்டர்கள் இருக்க, பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்.
இதற்கிடையே, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் சீமானின் பேச்சை கண்டித்தன.
இந்த நிலையில்தான், மார்ச் 8ம் தேதி பெண்கள் தினமான இன்று காலை வரை, மகளிர் தினம் குறித்த அறிக்கை எதையும் சீமான் வெளியிடவில்லை.
நமது தமிழன் குரல் சார்பில் இதை சுட்டிக்காட்டும் வதமாக, 2023ம் ஆண்டு சீமான் வெளியிட்ட மகளிர் தின அறிக்கையை இன்று வெளியிட்டோம்.
( தொடுப்பு: https://tamilankural.com/the-power-of-a-woman-happy-womens-day-seeman/)
அதன் பிறகு, காலை 10.15க்கு, சீமான், மகளிர்தின அறிக்கை வெளியிட்டார்.
முந்தைய ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி அந்த அறிக்கை இருந்தது.
“தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க பல்வேறு அமைப்புகள் இருந்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரிக்கிறது. அரசே விற்கும் மதுவும், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனையும்தான்” என்றும் சீமான் குறிப்பிட்டு இருந்தார்.
இது சுட்டிக்காட்ட வேண்டிய விசயம்தான். வரவேற்போம்.

தவிர, 2023ம் ஆண்டு வள்ளலார், பாரதி பாரதிதாசன்,கவிமணி தேசிக விநாயகம், பிரபாகரன் ஆகியோரின் மேற்கோள்கள் குறிப்பிட்டது போலவே இந்த ஆண்டும் அவை குறிப்பிடப்பட்டு இருந்தன.

அதே நேரம், அப்போது, ‘அடிமைத்தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும்’ என அறச்சீற்றம் கொள்கிறார் ஐயா பெரியார்” என்று 2023ம் ஆண்டு வெளியான வாசகம் இன்று வெளியிடப்பட்ட ( 2025 மகளிர் தின அறிக்கையில்) இல்லை.

இதையாவது புரிந்துகொள்ள முடிகிறது. பெரியார்தான் ஆகாதவராகப்போய்விட்டாரே…!
2023ல் சீமான் வெளியிட்ட மகளிர் தின அறிக்கையில் இடம் பெற்ற ஒரு வார்த்தையும் விடுபட்டு உள்ளது.
அப்போது, “இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப்படையெடுப்புகளினாலும், ஆரிய இனக்கலப்புகளினாலுமே பெண்களுக்குரிய தலைமைத் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு, பெண்ணடிமைத்தனம் வேரூன்றப்பட்டிருக்கிறது” என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார்.
இன்றைய அறிக்கையில், “இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்புகளால்தான் பெண்களுக்குரிய தலைமை திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனம் வேரூன்றியிருக்கிறது” என்று மட்டுமே உள்ளது.
அதாவது, “ஆரிய இனக்கலப்புகளினாலுமே..” என்கிற வார்த்தைகளை நீக்கி விட்டார் சீமான்.
2023ல் வெளியான தனது அறிக்கையை இப்போது நகல் எடுத்தவர், ஆரியர் என்பதை மட்டும் நீக்கி இருக்கிறார்.
- டி.வி.சோமு