“பிரபாகரனின் ஊர்ப்பாசம்!”: ‘பேரன்பும் பெருங்கோபமும்’ பட விழாவில் சீமான்!

“பிரபாகரனின் ஊர்ப்பாசம்!”: ‘பேரன்பும் பெருங்கோபமும்’ பட விழாவில் சீமான்!

‘இ 5′ என்டர்டெயின்மென்ட்’ காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் மகன் விஜித் நடிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், சீமான் (நா.த.க), சினேகன், கரு.பழனியப்பன், வசந்தபாலன், தேவயானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.

இந்த நிகழ்வில்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,

“பெருங்கோபத்தின் பிறப்பிடமே பேரன்பு என்பது தான். நான் என்னுடைய தம்பி படத்தை எடுத்த போது கீழே துணை தலைப்பாக பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் என போட்டிருந்தேன். என் தலைவரை மனதில் வைத்து தான் அந்த வார்த்தைகளை போட்டேன். தன் இனத்தின் மீது அவர் வைத்திருந்த பேரன்பு அந்த இனம் அழித்து ஒழிக்கப்படும்போது அதை காக்க வேண்டிய பெரும் கோபத்திற்கு ஆளாகி விட்டார். பாரதியின் பெரும் கோபத்திற்கு இந்த மண்ணை, மக்களை அவர் ரொம்பவே நேசித்தது தான் காரணம். புதியவர்களுக்கு துணிந்து வாய்ப்பு கொடுப்பதே பெரிய சாதனைதான். அதை ஜெய் கிருஷ்ணன் செய்துள்ளார்.

தங்கர் பச்சான் அழகி படத்தை எடுத்து முடித்தபோது எனக்கு போட்டுக் காட்டினார். படம் பார்த்துவிட்டு வந்து கட்டிப்பிடித்து நன்றாக இருக்கிறது என பாராட்டினேன். தங்கர் பச்சானே நம்ப முடியாமல் திகைத்தார். பக்கத்தில் இருந்த அந்த படத்தில் தயாரிப்பாளர், நண்பனை பாராட்டுவதற்காக இப்படியா பொய் பேசுவது என்று சிரித்தார். ஆனால் படம் அபார வெற்றி பெற்ற பிறகு அவரே நீங்கள் சொன்னபடி தான் நடந்தது என்று கூறினார்.

தன் மகனை வைத்து ஏற்கனவே டக்கு முக்கு டிக்கு தாளம் என்கிற படத்தை தங்கர் பச்சான் எடுத்து வைத்திருந்தாலும் இந்த பேரன்பும் பெருங்கோபமும் படம் முதல் படமாக வரட்டும் என முடிவு செய்து விட்டார்கள். தம்பி விஜித்திற்கு அறிமுகப்படத்திலேயே இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை தூக்கி சுமக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது பெரிய விஷயம் தான். பல படங்களில் நடித்த அனுபவம் பெற்ற நடிகரைப் போல நடிப்பை உரையாடலை உச்சரிப்பை வெளிப்படுத்தி உள்ளது விஜித்திடம் தெரிகிறது. அந்த அளவிற்கு திரை அறிவை நன்றாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தியுள்ளார்.

தலைவர் அவர்களைச் சந்தித்தபோது, அவர் என்னிடம் தமிழ் சினிமா இயக்குநர் குறித்துப் பேசினார். அப்போது, “எத்தணையோ பேர் கதை, வசனம் எழுதி படம் எடுக்கிறீர்கள், ஆனால் பாலு மகேந்திரா மாதிரி ஏன் எடுக்க முடியவில்லை” என்று என்னிடம் கேட்டார். இருவரும் ஒரே ஊர் என்பதால் அதை ஊர் பாசம் என்று நினைத்துக் கொண்டேன்.

தேவையற்ற சிறு நகர்கவுகள், காட்சிகள், வசனங்கள் எதுவும் இல்லாமல் கச்சிதமாக இருக்கும் பாலு மகேந்திரவின் திரைப்படங்கள்.

என் தலைவரை பாராட்டிய பாலுமகேந்திராவின் பாசறையில் இருந்து வந்திருக்கும் சிவப்பிரகாஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவரது முதல் படம் போலவே இது இல்லை. படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவரை பார்த்தவுடன் நிஜமான மலையாளி என்று நான் நினைத்து விட்டேன். தன்னை ஒரு கேமரா படம் பிடிப்பது என்கிற உணர்வே இல்லாமல் வெகு இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மைம் கோபி தெலுங்கு, கன்னடம் என எந்த சேனலை திருப்பினாலும் இருக்கிறார். நமக்கெல்லாம் அது பெருமை.. தம்பி அருள்தாஸ் கெட்டவனாக நடிக்கும் போதெல்லாம் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தேவையற்ற பேச்சுக்கள் இல்லாத, இயல்புக்கு ஏற்ற மாதிரியான அருமையான உரையாடலை முருகேஷ் பாபு எழுதி இருக்கிறார். பசும்பொன் திரைப்படத்தில் பணியாற்றிய போது நான் எழுதி கொடுக்கும் வசன பேப்பர்களை பார்க்காமலே கீழே தூக்கி போட்டு விடுவார் பாரதிராஜா அப்பா. அதன் பிறகு ஒரு காட்சி எடுக்கும் போது இதற்கு எங்கே வசனம் என்று கேட்பார். அவர் தூக்கி போட்ட பேப்பரை அவரிடமே கொடுப்பேன். இது சரியாக இருக்கிறது என்று அவர் சொல்லும்போது, இதைத்தான் நீங்கள் தூக்கி போட்டீர்கள் என்று சொல்வேன். சில நேரங்களில் கோவித்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பிய போது என் குரு சித்ரா லட்சுமணன் தான் என்னை தட்டிக்கொடுத்து சாந்தப்படுத்தினார். இன்று தமிழ் சினிமாவின் திரைக்களஞ்சியமாக சித்ரா லட்சுமணன் இருக்கிறார்.

வழக்கு கோர்ட் என தினசரி ஒரு இடத்திற்கு அலைந்து கொண்டிருந்தாலும் நேற்று இந்த படத்தை நேரம் ஒதுக்கி பார்த்தேன். இன்று இதோ திருச்சியில் இருந்து வந்ததும் இங்கே இந்த விழாவிற்கு வந்து விட்டேன். தங்கர் பச்சானுக்காக இல்லை என்றாலும் விஜித்திற்காக இந்த விழாவிற்கு வர வேண்டி இருந்தது, ஊழல், லஞ்சம் இந்த நாட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை.. அப்படி என்றால் யார் கொடுக்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள் ? லட்சுமி ராமகிருஷ்ணன் தான் நியாயமான தீர்ப்பை சொல்ல வேண்டும்.. தனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கக் கூடாது.. எவனுக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் லஞ்சம், ஊழல் பிறக்கிறது. கோயில் கருவறையில் இருந்து தாயின் கருவறை வரை ஊழல், லஞ்சம் இருக்கிறது.

காலம் பல கவிஞர்களை உருவாக்கி இருக்கிறது. நமது காலத்தை உருவாக்கியவன் நம் பாட்டன் பாரதி. சுதந்திரம் கிடைப்பது, மாநிலம் பிரிப்பது, தமிழ்நாடு என பெயர் வைப்பது என எல்லாவற்றையுமே சுதந்திரத்திற்கு முன்பே உணர்ந்து பாடியவன் பாரதி. எல்லா காலங்களிலும் எல்லா மகான்களுமே இந்த சாதிக்கு எதிரான குரலை ஒலித்து இருக்கிறார்கள். ஆனாலும் இப்போது வரை இந்த சாதி சாகமாட்டேன் என்கிறது. சாதி என்பது கொரோனாவை விட மிகப்பெரிய கொடிய நோயாக இருக்கிறது. உலகத்திலேயே புனிதமான ஒன்றான ஒன்றான அன்பை அது கொன்று விடுகிறது.

அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் ஒவ்வொரு நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் கடவுச்சீட்டு, விசா கட்டாயம் வேண்டும். ஆனால் அன்னை தெரசாவை அனைத்து நாடுகளும் இது எதுவுமே இல்லாமல் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என கைகூப்பி அழைத்தன. காரணம் அன்பால் அத்தனை நாடுகளையும் கட்டிப்போட்டவர் அன்னை தெரசா. சாதி என்பது பெரிய நோய். சாதி, மதம், சாராயம் இந்த மூன்றும் தமிழ் தேசியத்தின் மிகப்பெரிய பகை. எது செத்தாலும் பரவாயில்லை, தன் சாதி சாகக்கூடாது என்று நினைக்கிறவன் அதிகம் பேர் இருக்கிறார்கள். அப்படி நினைக்கிற கூட்டத்திற்கு இடையே இரண்டு காதலர்கள் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படத்தின் கதை.

சாதி என்கிற கொடிய நோயை ஒழிக்காமல் சமநிலை சமூகம் பிறக்காது. எத்தனையோ மகான்கள் வந்து கூறியும் இன்னும் இந்த சாதி ஒழியவில்லை. இன்னொரு தலைமுறை வந்து இந்த சாதியை காலில் போடும் செருப்பாக போட்டு தேய்த்தால் மட்டுமே சாதி மறையும். இந்த சாதிய கொடுமையை, வலியை மிகைப்படுத்தாமல் இரண்டு மணி நேரம் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். இனிவரும் தலைமுறையாவது இந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு எல்லாவற்றையும் தாண்டி மனிதம் நோக்கி, மானுடம் பயணிக்க வேண்டும்.

முதல் படத்திலிலேயே தம்பி இயக்குனர் சிவப்பிரகாஷுக்கு இசைஞானியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இசைஞானி என்கிற வார்த்தை கூட குறைவுதான்.. இசை இறைவன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.. எது கேட்டாலும் அருள்வார். உலகில் எத்தனையோ இசைக்கலைஞர்கள் இருந்தாலும் இளையராஜாவுக்கு இணை இல்லை. தளபதி என்ற ஒரு படத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை விதமான பாடல்கள்.. இது எல்லாம் உருவாக்கியவர் ஒரே ஆள் தான் என்று சொன்னால் உலகில் யாராவது நம்புவார்களா ?

அது அவரால் மட்டும்தான் முடியும். இயக்குநர் ஒரு திரைக்கதை எழுதினால் இளையராஜா தனது இசையால் இன்னொரு திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார். நம் தாய் பாடிய தாலாட்டு யாருக்கு ஞாபகம் இருக்கிறது.. இன்று 40 வருடங்களாக அவர் பாடல்களை தான் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.. கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை. அவர் இசையை கேட்டால் சோறு தண்ணி எதுவுமே தேவையில்லை. அவர் விஜித் படத்திற்கும் இசையமைப்பார். விஜித்தின் பையன் வந்து இயக்கப் போகும் படத்திற்கும் இசையமைப்பார்.

எப்படி இலக்கிய உலகில் ஒரு பாரதி வந்தாரோ, அது போல தான் இசை உலகில் இளையராஜா.. அது ஒரு வரம். அந்த வகையில் இசை இறைவனின் ஆசி பெற்ற ஒரு படம் இது. தம்பி விஜித் பாலைவனச்சோலை படத்தில் சந்திரசேகர் வெளிப்படுத்தியது போன்று ஒரு அற்புதமான உடல் மொழி, நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவகுமாரின் மகன்கள் என்கிற அடையாளத்துடன் அறிமுகமானாலும் சூர்யாவும் கார்த்தியும் தங்கள் திறமையால் தான் வெளிச்சம் பெற்றார்கள்.

அதேபோல எஸ்ஏ சி யின் மகன் என அறிமுகமானாலும் விஜய் தனது ஆற்றலால் தான் என்று இவ்வளவு பெரிய புகழ்பெற்ற ஒரு இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் உழைப்பு தான் காரணம். எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கடுமையான உழைப்பு மட்டுமே. எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்து தான் சாதனை. சாதனையை வெற்றியின் மூலமாகத்தான் அடைய முடியும்.. வெற்றிக்கு கடின உழைப்பு வேண்டும்” என்று கூறினார்.

 

Related Posts