சர்தார் 2: சினிமா விமர்சனம்

சர்தார் 2: சினிமா விமர்சனம்

ஹாலிவுட் பாணி ஸ்பை த்ரில்லர்களை தமிழ் சினிமாவுக்குக் கடத்துவதில் தீவிரமாக இருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், மீண்டும் ஒரு பிரம்மாண்டமான களத்தோடு வந்திருக்கிறார். ‘மிஷன் இம்பாசிபிள்’, ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்’ போன்ற சர்வதேச படங்களின் தாக்கத்தோடு உருவாகியுள்ள இந்த ‘சர்தார் 2’ ரசிகர்களை எந்த அளவுக்குக் கவர்ந்தது? பார்ப்போம்.

முதல் பாகத்தில் ‘தண்ணீர் அரசியல்’ பற்றிப் பேசிய பி.எஸ். மித்ரன், இந்த இரண்டாம் பாகத்தில் ‘ஆன்டிபயாட்டிக்ஸ் அப்போகலிப்ஸ்’ (Antibiotic Resistance) எனும் மிக முக்கிய ஆபத்தை மையக்கருவாகக் கையில் எடுத்துள்ளார். தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைச் சாப்பிடுவதால் மனித உடலுக்குள் உருவாகும் ஆபத்துகளையும், ‘Doku’ எனும் கொடூர உயிரியல் ஆயுதத்தை (Bio-weapon) வைத்து உலகையே அழிக்கத் துடிக்கும் வில்லனின் சதியையும் அடிப்படையாகக் கொண்டதுதான் இக்கதை.

தந்தை சர்தார் சந்திரபோஸ் (கார்த்தி) இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, ஒரு டம்மி போஸ்டிங்கில் இருக்கும் ‘ரா’ ஏஜென்ட் விஜய் பிரகாஷ் (கார்த்தி), எப்படியாவது பெரிய கேஸைப் பிடித்து ‘ரா’வின் முதன்மை டீமுக்குச் செல்லத் துடிக்கிறார். அதேநேரம், ‘பிளாக் டேகர்’ (Black Dagger) என்றழைக்கப்படும் யோகி (எஸ்.ஜே.சூர்யா), ‘Doku’ உயிரியல் ஆயுதத்தை ஆக்டிவேட் செய்ய உதவும் 3 ரகசியக் கத்திகளைத் தேடி வேட்டையாடுகிறார். அந்த பேராபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற, விஜய் பிரகாஷும் அவரது தந்தை சர்தாரின் கடந்தகால நினைவுகளும் இணைந்து களமிறங்குகின்றன. இந்த பயோ வாரை வீழ்த்தி நாட்டைக் காப்பாற்றினார்களா இல்லையா என்பதே மீதிக்கதை!

 வழக்கம் போல ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் தாங்கிப் பிடித்துள்ளார். அப்பா சர்தார், மகன் விஜய் பிரகாஷ் என இரட்டை வேடங்களில் குரல், உடல்மொழி என வித்தியாசப்படுத்தி அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார், கார்த்தி.

ஆரம்பக் காட்சிகளில் ஸ்மார்ட்டான, மிரட்டலான வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுக்கிறார், எஸ்.ஜே சூர்யா. ஆனால், போகப் போகக் கதாபாத்திரம் ஆழமில்லாமல் எழுதப்பட்டதால், அவரது வழக்கமான மிகை நடிப்பு சற்றே சோர்வை ஏற்படுத்துகிறது.

சண்டைக் காட்சிகளிலும் பிளாஷ்பேக் போர்ஷனிலும் பக்காவாக நடித்து கவனத்தை ஈர்க்கிறார், மாளவிகா மோகனன்.ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் கொடுத்த வேலையை நிறைவாகச் செய்துள்ளனர். யோகி பாபுவும் நிழல்கள் ரவியும் விடுகதை சொல்லும் காமெடி காட்சிகள் ‘ஹிட் அண்ட் மிஸ்’ ரகம்.

சாம் சி.எஸ்ஸின் இசையில் பின்னணி இசை சில இடங்களில் விறுவிறுப்பைக் கூட்டி பலம் சேர்த்தாலும், பல இடங்களில் காட்சிகளின் வேகத்திற்கு முழுமையாக ஈடுகொடுக்காமல் விட்டுவிடுகிறது.

ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்குப் மிகப்பெரிய பிளஸ். ஆக்‌ஷன் காட்சிகளையும் மைசூர் தசரா விழா போன்ற பிரம்மாண்ட செட்களையும் கண்முன்னே நேர்த்தியாகக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார். ஆனால், VFX வேலைப்பாடுகள் பல இடங்களில் செயற்கையாகத் தெரிவதுடன், AI மூலம் சேர்க்கப்பட்ட சில விஷயங்கள் திரையில் பெரிய உறுத்தலாக அமைகின்றன. விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங் ஸ்டைலாக இருந்தாலும், 3 மணி நேர நீளத்தைக் குறைத்து இன்னும் இறுக்கமாகக் கத்தரி போட்டிருக்கலாம்.இயக்குநர் பி.எஸ்.மித்ரன் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்னையை பிரம்மாண்டமாகச் சொல்ல நினைத்தது பாராட்டுக்குரியது. குறிப்பாக, ஜப்பானில் சர்தார் நடத்தும் கடந்தகால மிஷன் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஆனால், ஹாலிவுட் பாணி ஸ்கிரீன்ப்ளேயை நம்பி, வீக்கான ரைட்டிங்கால் பல இடங்களில் கோட்டை விட்டுள்ளார். கதையில் சொல்லப்படும் மருத்துவத் தகவல்கள் இயல்பாகப் பயணிக்காமல் பாடம் எடுப்பது போல மாறுவதும், வில்லன் கொடுக்கும் ஆன்டிபயாட்டிக் லெக்சர்களும் சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன.

பெரிய ஆபத்து, சர்வதேச சதி என களம் பிரம்மாண்டமாக இருந்தாலும், ஒரு ஸ்பை த்ரில்லருக்குத் தேவையான பதற்றமும் ‘அடுத்து என்ன?’ என்ற பரபரப்பும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். இருந்தாலும், பெரிய அளவில் போரடிக்காமல், தேவையில்லாத காட்சிகளால் கடுப்பேற்றாமல், எடுத்துக்கொண்ட மிஷனை கச்சிதமாக முடித்த வகையில் ‘சர்தார் 2’ ஒருமுறை பார்க்கக்கூடிய ஆக்‌ஷன் த்ரில்லர்!

Related Posts