“நெகட்டிவ் ஷேடுதான் இப்போதைய டிரெண்ட்!”: ‘ஆழி’ பட விழாவில் சரத்குமார்!

“நெகட்டிவ் ஷேடுதான் இப்போதைய டிரெண்ட்!”: ‘ஆழி’ பட விழாவில் சரத்குமார்!

மலையாளத் திரையுலகில் ‘மேல் விலாசம்’ போன்ற சிறந்த படங்களை வழங்கிய மாதவ் ரமா தாசன், முதன்முறையாகத் தமிழில் தடம் பதிக்கும் திரைப்படம் ‘ஆழி’. 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இப்படத்தை தமிழகத்தில் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

சென்னையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில், படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். ஜெஸ்ஸி கிப்ட் இசையமைக்க, ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சரத்குமாருடன் இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீஜித் ரவி  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விநியோகஸ்தர் ஹரி உத்ரா: “சரத்தின் ரசிகனாகக் பெருமிதம் கொள்கிறேன்!”

“இன்றைய சூழலில் நல்ல கன்டென்ட் உள்ள படங்களைக் கொண்டு சேர்ப்பதே பெரிய சவால். ‘ஆழி’ அந்தச் சவாலை முறியடிக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும். சிறு வயது முதலே நான் சரத்குமார் சாரோடைய தீவிர ரசிகன். அவர் நடித்த படத்தை விநியோகம் செய்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் திரையுலகின் நலனுக்காக அனைத்துச் சங்கங்களும் இணைந்து சிறு பட்ஜெட் படங்களுக்கான புதிய வியாபார வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.”

நடிகை தாமரை செல்வி: “பிக் பாஸில் பார்த்தேன்… இன்று அவர் படத்தில்!”

“மேடை நாடகங்களில் இருந்து வந்த எனக்கு இதுதான் முதல் மேடை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தான் சரத்குமார் சாரை முதன்முதலில் பார்த்தேன். இன்று அவருடன் நடித்திருக்கிறேன் என்பது கனவு போன்றது. என்னை மலையாளத்தில் பேச வைத்து அழகு பார்த்த இயக்குநருக்குப் பெரிய நன்றிகள்!”

நடிகர் வையாபுரி: “ஒரே நாளில் முடிந்த கால்ஷீட் மேஜிக்!”

“2001-க்கு பிறகு இப்போதுதான் சரத்குமார் சாருடன் மீண்டும் இணைந்துள்ளேன். இதில் நான் அப்பாவாக நடித்துள்ளேன். இரண்டு நாள் கால்ஷீட் கேட்ட இயக்குநர், மலையாள வேகத்தில் ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்துவிட்டார். மலையாள இயக்குநர்கள் தமிழில் கால் பதிக்கும்போது ஒரு தனித்துவமான கதையோடு வருகிறார்கள். அதற்கு ‘ஆழி’ ஒரு சாட்சி.”

நடிகை தேவிகா சதீஷ்: “திரையிலும் நிஜத்திலும் அவர் எனக்கு அப்பா!”

“தமிழில் இது எனக்கு மூன்றாவது படம். சரத்குமார் சாருக்கு மகளாக நடித்தது பெரும் பாக்கியம். படப்பிடிப்பு தளத்தில் அவர் எனக்கு ஒரு தந்தையைப் போலவே அன்பு காட்டி, பல ஆலோசனைகளை வழங்கினார். ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் டிசைனிங் இப்படத்தை வேறொரு தரத்திற்கு உயர்த்தியுள்ளது.”

நடிகர் இந்திரஜித் ஜெகன்: “சரத்குமார் – என் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்!”

“சரத்குமார் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். திரைக்கும் பின்னாலும் அவர் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம். குறிப்பாக, அவரது நேரம் தவறாமை (Punctuality) என்னை வியக்க வைத்தது. ரசூல் பூக்குட்டியின் பின்னணி இசை படத்திற்குப் பிரம்மாண்டத்தைக் கொடுக்கும்.”

தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா: “85 சதவீத நடிகர்கள் செய்யாததை சரத் செய்கிறார்!”

“ஆழி என்றால் கடல். கடலின் ஆழத்தை யாராலும் அளக்க முடியாது, அதேபோல்தான் சரத்குமாரின் நடிப்பின் ஆழமும்! வில்லன், ஹீரோ எனப் பல அவதாரம் எடுத்தவர், இதில் முற்றிலும் வித்தியாசமானவர். இன்றைய 85 சதவீத நடிகர்கள் கதையை உள்வாங்குவதில்லை, ஆனால் சரத் சார் இன்றும் ஒரு மாணவனைப் போலக் கற்றுக்கொள்கிறார். ரசூல் பூக்குட்டி இப்படத்தில் கடலின் ஆழத்தின் ஒலியை (Sound of Depth) உணர வைத்துள்ளார்.”

இயக்குநர் மாதவ் ரமா தாசன்: “அதிகாலை 3 மணிக்கும் அவரிடமிருந்து அழைப்பு வரும்!”

“மலையாளத்தில் மூன்று வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தமிழில் எனது முதல் முயற்சி இது. 70 சதவீதம் கடலில் நடக்கும் கதை என்பதால் ஒலி மிக முக்கியம். அதற்காக ரசூல் பூக்குட்டி தன் மைக் சேதமடையும் அளவிற்குக் கடுமையாக உழைத்துள்ளார். படத்தில் நடித்த நாயின் ஒலிக்காகச் செய்த உழைப்பு ரசிகர்களைக் கவரும். சரத்குமார் சார் அதிகாலை 3 மணிக்குக் கூட அழைத்துத் தன் கதாபாத்திரம் பற்றிச் சந்தேகம் கேட்பார். அந்த அர்ப்பணிப்புதான் இப்படத்தின் வெற்றி.”

ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி: “தென்னிந்தியாவின் சினிமா காதல் வியக்க வைக்கிறது!”

“கல்லூரி காலத்தில் சரத்குமார் சார் படங்களைப் பார்த்தவன் நான். இன்றும் அதே இளமையுடன் அவர் இருப்பது ஆச்சரியம். அமிதாப் பச்சன், ஷாருக்கான், கமல் சார் போன்றோரிடம் இருக்கும் அதே ‘டேக் இட் ஈஸி’ பாலிசி இவரிடமும் இருக்கிறது. நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இயக்குநருக்கு இவ்வளவு சுதந்திரமும் ஆதரவும் தரும் கலாச்சாரம் தென்னிந்தியாவில் மட்டுமே உண்டு. அதனால்தான் இங்கு கலை நுணுக்கமான படங்கள் ஜெயிக்கின்றன.”

நடிகர் சரத்குமார்: “நெகட்டிவ் ஷேடுதான் இப்போதைய டிரெண்ட்!”

 “இயக்குநர் மாதவ் சொன்ன கதை முற்றிலும் வித்தியாசமானது. ஒரு மீன்பிடிப் படகிற்குள் நடக்கும் கதை. அரங்கிற்குள் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் படகை உருவாக்கிப் பிரம்மாண்டம் செய்திருக்கிறார்கள். இன்று ரசிகர்கள் பல தளங்களில் படங்களைப் பார்க்கிறார்கள். எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும். இன்று ஹீரோ என்றால் நல்லவனாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை, தப்பு செய்பவர்களையும் (புஷ்பா போல) ஹீரோவாக ஏற்கிறார்கள். இந்தப் படத்தில் நான் நெகட்டிவ் ஷேடில் நடித்திருக்கிறேன். ஒரு நாயுடன் நடக்கும் சண்டைக்காட்சி இதில் ஹைலைட். ரசூல் பூக்குட்டியின் உழைப்பிற்கு இன்னும் பல ஆஸ்கார்கள் கிடைக்க வேண்டும்!”

Related Posts