அன்பே டயானா: திரை விமர்சனம்: ஜாலியான பெரம்பூர் லவ்ஸ்!
ஜமா என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாகவும் இயக்குநராகவும் உருவெடுத்துள்ள பாரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கும் இரண்டாவது படைப்பு அன்பே டயானா.
வழக்கமான காதல் மற்றும் மோதல் பின்னணியைக் கொண்ட கதைக்களம் என்றாலும், அதை வடசென்னை பெரம்பூர் என்கிற தனித்துவமான பின்னணியில், புத்துணர்ச்சியூட்டும் திரைக்கதையோடு கையாண்டிருக்கிறார் இயக்குநர்.
ஆங்கிலோ இந்தியப் பெண் ஒருவருக்கும், நாயகனுக்கும் இடையிலான காதலும், அதற்குப் பின்னால் இருக்கும் குடும்ப உறவுகள், நட்பு மற்றும் உள்ளூர் சூழலும்தான் படத்தின் மையக்கரு. பெரம்பூர் நகரின் வாழ்வியலை மையமாக வைத்து, காதல், காமெடி, குடும்ப உணர்வுகளை எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறது இப்படம்.
நாயகன் பாரி, இயல்பாக நடித்திருக்கிறார். காதலியைத் தவிர்க்க நினைப்பது, பிறகு அதை நினைத்து வருந்துவது, இரண்டு பெண்களுக்கிடையே திண்டாடுவது என உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்திருக்கும் நாயகி ரம்யா, அழகிலும் நடிப்பிலும் ஜொலிக்கிறார். காதலனிடமும், அவனது தந்தையிடமும் எகிறும் காட்சிகளில் மிரட்டுகிறார்.
எப்போதும் போல் சேத்தன் தனது தேர்ந்த நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார். கதாநாயகியின் தந்தை கதாபாத்திரமும் கவனம் பெறுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நடிகை ரோஜா, பாந்தமான அம்மாவாக வருகிறார். பிறகு அனலடிக்கும் பாத்திரத்தில் கொதிக்கிறார்.
படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள கோபி, படம் முழுக்கச் சிரிக்க வைக்க முயன்று தோற்கிறார்.
பெரம்பூரின் தெருக்களையும், அங்குள்ள வாழ்வியலையும் அத்தனை அழகாகவும் வண்ணமயமாகவும் கேமராவில் சிறைபிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், ஷெல்லி காலிஸ்ட் . வழக்கமான வடசென்னைத் திரைப்படங்களின் காட்சி அமைப்புகளில் இருந்து விலகி, ஒவ்வொரு காட்சியையும் புத்துணர்வோடும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்குப் பெரும் பலம்.
படத்தின் உணர்வுப்பூர்வமான காதல் காட்சிகளுக்கும், இறுதிக்கட்ட நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பின்னணி இசை மூலம் மிகச் சிறந்த முறையில் உயிர் கொடுத்து உள்ளார் பரத் சங்கர். . காட்சிகளின் தீவிரத்திற்கும் ஏற்ப இசை நகர்வது ரசிக்க வைக்கிறது.
இயக்குநர் பாரி இளவழகன் தான் ஒரு சிறந்த கதைசொல்லி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். குறிப்பாக, தமிழ் சினிமாவில் பொதுவாக இருண்ட பக்கமாகவே காட்டப்பட்டு வந்த வடசென்னையை, அதாவது பெரம்பூர் பகுதியை, மிகத் தூய்மையாகவும் புத்துணர்ச்சியாகவும் காட்டியதில் இவரது முத்திரை பளிச்சிடுகிறது.
ஷாலிமார் ரெஸ்டாரண்ட், உள்ளூர் ஸ்நாக்ஸ் கடைகள், தேவாலயங்கள், தெலுங்கு சாதிப் பெருமை பேசும் அம்மா கதாபாத்திரம் மற்றும் பெங்களூரு நண்பர் போன்ற நுட்பமான விவரங்களை அழகாகத் திரைக்கதையில் நெய்துள்ளார். குறிப்பாக, படத்தின் கடைசி முப்பது நிமிடங்கள் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் கலகலப்பான திரைக்கதையைக் கையாண்டு இயக்குநராகத் தனித்து நிற்கிறார்.
முதல் பாதியின் மெல்லிய காதலில் தொடங்கி, இரண்டாம் பாதியின் அசத்தலான திரைக்கதை நகர்வுடன், உறவுகளின் மேன்மையைப் பேசும் ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படம்.
பார்த்து ரசிக்கலாம்.
