“தீண்டாமை – மது – சனாதனம் – ஒழிப்பு!”: தீர்ப்பர் ஸ்ரீமதி கருத்தில் தவறு!
“சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேச.. டெல்லி பாஜக ஐடி பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா: “இது, இன – இந்து மத அழிப்பு” என ட்விட் போட்டார். அவர் மீது வழக்கு பதிந்தது தமிழ்நாடு காவல்துறை. தற்போது அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பர் ஸ்ரீமதி கூறிய கருத்துக்கள் சர்ச்சயைாகி உள்ளன.
இது குறித்த தினமலர் யு டியுப் சேனல் விவாதத்தில் நான் பேசியதில் இருந்து…
@ நீதிபதி ஸ்ரீமதி, தமிழில் எந்த அளவுக்கு தேர்ந்தவர் என தெரியவில்லை. “சனாதன ஒழிப்பு என்கிற வார்த்தையின் அர்த்தம், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பது அர்த்தம். இது இனப்படுகொலையை குறிக்கிறது!” என, தெரிவித்த பாஜக பிரமுகரின் கருத்தையே இவரும் சொல்லி இருக்கிறார்.
“சனாதன ஒழிப்பு” என்பது, எப்படி, அதைப் பின்பற்றும் நபர்களை ஒழிப்பதாகும்?
‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ என்கிற அமைப்பு இருக்கிறது. மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. இவற்றின் அர்த்தம், தீண்டாமை & மதுவை ஒழிப்பதே. தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்களை/ மதுப் பழக்கம் கொண்டவர்களை ஒழிப்பது என்று அர்த்தமாகாது.
அப்படி வைத்துக்கொண்டால்…
‘சனாதனம் என்றால் அழிவற்றது என்று பொருள்’ என்கிறார்களே, அப்படியானால் ‘மற்றவை அழியும்’ என்றுதானே அர்த்தம். இதற்காக, இப்படி சொன்னவர்கள் மீது, ‘மற்றவற்றை0’ பின்பற்றுபவர்கள், இன அழிப்பு புகார் கூறலாமா?

@ “நூறு வருடங்களாக பெரியார் – திராவிடர் கழகம், இந்து மதத்தைப் பற்றி மட்டுமே விமர்சிக்கிறார்கள். உதயநிதியும் அதையே செய்கிறார்” என்கிறார் ஸ்ரீமதி.
நீதிபதியாக இருந்தாலும் சொல்கிறேன்.. அவர் இந்த வீடியோவை பார்த்தாலும் பார்க்கட்டும். அவரது இந்த எண்ணம் தரமானது அல்ல.
ஊழல் புகார் கூறினால் “அந்த கட்சி செய்யலையா” என்பார்கள். இந்து மதத்தில் குறை இருக்கிறது என்றால், இஸ்லாம்/ கிறித்துவத்தில் இருக்கிறதே என்கிறார்கள். அப்படியானால் அல்லா, ஏசு ஆகியோரை இந்து மதக் கடவுளாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
சட்டம் யாரை எல்லாம் இந்து என சொல்கிறதோ, அவர்கள்தான் இந்து மதத்தை விமர்சிக்கிறார்கள். அதனால்தான் பல நல்ல மாற்றங்கள் வந்திருக்கின்றன. இந்த விமர்சனங்களால்தான் பல நாகரீக மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
உதாரணமாக, பிராமணர்கள் கடல்தாண்டி போகக்கூடாது என்று சொல்லப்பட்டது. இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுதும் பரவி இருக்கிறார்கள். அங்கு போயும் கோயில் கட்டுகிறார்கள். பரவாயில்லை… கடல் தாண்டிப் போய் பிழைக்கிறார்களே!
இந்து மதத்தின் பெயரால் குறிப்பிட்ட சமூகத்தினர் தேவதாசிகள் என முத்திரை குத்தப்பட்டு பெருந் துயரத்தை சந்தித்தனர். அதை நிறுத்த முயன்றபோது, சத்யமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள், “அது இந்து மதத்தின் புனிதம்..” என்றார்கள்.
அதற்கு (மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் “இதுவரை நாங்கள் அந்த பணியை செய்துவிட்டோம். இனி, இதை ஆதரிக்கும் உங்கள் குடும்பத்துப் பெண்கள் செய்யட்டும்” என்றார்.
அப்படி கடுமையான வாதங்களால்தான், அந்த கொடூர முறைக்கு முடிவு வந்தது. ஆகவே விமர்சனங்கள் கடுமையாக இருப்பதில் தவறில்லை
இஸ்லாம் மதத்தில், பெண்கள் படிக்கக்கூடாது என சொல்லி இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த மக்களிடையே மத ரீதியாக, பெண்கள் படிக்க வேண்டாம் என நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதனாலேயே மக்கள் தொகைக்கு ஏற்ப அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் உயர் அரசு பதவிகளில் இல்லை.
ஆக.. இந்து மத நம்பிக்கை, பற்று இருந்தாலும் மதத்தின் பெயரிலான பல கட்டுப்பாடுகளை ஒழித்ததால்தான் மக்களிடையே முன்னேற்றம் ஏற்பட்டது.
@ “சனாதனம் சிறந்தது, வாழ்க்கை முறையைச் சொல்கிறது” என்றெல்லாம் பேசுபவர்கள், குறிப்பாக சனாதனம் என்றால் என்ன.. அது என்ன சொல்கிறது என்பதை விளக்குவதே இல்லை. இந்தத் தீர்ப்பில் கூட ஸ்ரீமதி, “சனாதனத்தை ஒழிப்பதா” என ஆவேசப்பட்டு இருக்கிறாரே தவிர அதுகுறித்த விளக்கத்தைச் சொல்லவில்லை.
போகட்டும்… அதை ஒரு வார்த்தையாகவே வைத்துக்கொல்வோம்.
இதை வைத்து ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன்.
“கிளப்புகளை ஒழிக்க வேண்டும்” என்று சொல்கிறார்கள். அதாவது காபரே டான்ஸ், சாராய கிளப் ஆகியவற்றைத்தான்சொல்கிறார்கள். கபடி கிளப்புகளை அல்ல.
ஆகவே சனாதனத்தின் பெயரால் சாதி ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட சமூக இழிவுகள் இருப்பதால், அந்த பெயரைச் சொல்லி ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். அவ்வளவுதான்.
@ பகவத் கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணரிடம் “குலதர்மம் அழிந்தால் சனாதன தர்மம் (நிலையான அறம்) அழியும்” என்று கூறுவதாக, ஒன்றாம் அத்தியாயம், 39 மற்றும் 40வது பாடல்களில் உள்ளது.
மனுஸ்மிருதி, ராமாயணம் உள்ளிட்டவற்றில், “ஏஷ தர்ம சனாதன” அதாவது “இதுவே நிலையான தர்மம்” என சொல்லப்பட்டு இருக்கிறது.
பகவத் கீதை ஒருவன் தன் குலத்தொழிலை விடுவது பாவம் என்பதையும் கீதை வலியுறுத்துகிறது. விஷ்ணு புராணம், “ஒருவன் தனது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே அடுத்த பிறவியில் உயர்ந்த சாதியிலோ அல்லது தாழ்ந்த சாதியிலோ பிறக்கிறான்” என்று கூறுகிறது.
( சண்டோக்ய உபநிடதம், “ரமணீய சரணா அப்யாசோ யத்தே ரமணீயாம் யோனிமா பத்யேரன்…” என்கிறது. இதன் அர்த்தம், “நற்செயல்களைச் செய்தவர்கள் பிராமண, சத்திரிய அல்லது வைசிய கருப்பையில் பிறப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள் நாய், பன்றி அல்லது ‘சண்டாள’ (தீண்டத்தகாதவர்) கருப்பையில் பிறப்பார்கள்” என்பதே.
கிருஷ்ணர், “என்னைச் சரணடைந்தால் பெண்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் எனப் பாவ யோனியில் (தாழ்ந்த பிறப்பு) பிறந்தவர்கள் கூட மேலான கதியை அடைவர் ” – 9 வது அத்தியாயம் .32வது பாடலில் கூறுகிறார்.
இதன் மூலம், “தொழில் அடிப்படையில்தான் மக்களை பிரித்தார்கள்” என்பது பொய் என்பதை அறியலாம். ஆனால் காலம் காலமாக இருக்கும் அழியாத(!) சனாதனம் இவை குறித்து என்ன சொல்கிறது!)
@ “வள்ளலார், காந்தி, காமராஜர் உள்ளிட்டோர் சனாதனத்துக்கு எதிரானவர்கள் என்பதுதவறு. இவர்கள் சனாதனத்தை உயர்த்திப் பிடித்தார்கள். ஈவேரா (தந்தை பெரியார்) மட்டும்தான் சனாதனத்தை விமர்சித்தார்” என்கிறார் ஸ்ரீமதி.
காந்தி மட்டும்தான் தன்னை சனாதனி என அறிவித்துக்கொண்டார். அவரே அடுத்த வார்த்தையில், “தீண்டாமையை ஏற்கமாட்டேன்” என்றார்.
மற்றவர்கள் சனாதனத்தைப் புகழ்ந்து ஏதும் கூறவே இல்லை.
இன்னும் சொல்லப்போனால், வள்ளலார், சாதி மத,சாத்திரங்களை “குப்பை” என்றார். கீதை, வேதம், மனு ஸ்மிருதி போன்றவவை வலியுறுத்தும் நால்வர்ணத்தை “பிள்ளை விளையாட்டு” கடுமையாக சுட்டிக்காட்டுகிறார், வள்ளலார். அவர் என்றும் சனாதனத்தை ஆதரித்ததில்லை. அதே போலத்தான் பிறரும்.
@ “ராமர், விநாயகருக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்தார்; விநாயகர் சிலைகளை உடைத்தார்; இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்கிறார் ஸ்ரீமதி.
தன் மீது ஒற்றைச் செருப்பை வீசியவரைப் பார்த்து, இன்னொன்றையும் வீசட்டுமே.. அப்போதுதான் பயன்படும் என்றவர் பெரியார். அவர் செருப்புகளை வீணாக்க மாட்டார்.
1971 ஜனவரியில் சேலத்தில் தி.க. மாநாடு, பேரணி நடந்தது. ஊர்வலத்தில், இந்து தெய்வங்களின் உருவப்படங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
ஊர்வலம் மீது ஜனசங்கம் என்கிற இந்துத்துவ அமைப்பனர் செருப்பை வீசினர். இந்த ஜனசங்கம்தான் பிற்காலத்தில் பாஜகவாக உருமாறியது.
இதுதான் நடந்த உண்மை.
@ அதே சேலம் மாநாட்டில் நடந்த இன்னொரு விசயம்தான் இதைவிட முக்கியமானது.
“இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 497-ன்படி ஒரு ஆண் இன்னொருவரின் மனைவியுடன் உறவு கொள்வது குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், அதே ஆண் ஒரு திருமணமாகாத பெண்ணுடன் உறவு கொண்டால் அது குற்றமாகாது. இது பெண்ணை ஒரு ஆணின் ‘உடைமையாக’ கருதும் போக்கைக் காட்டுகிறது. எனவே, இச்சட்டம் நீக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதாவது, அந்தச் சட்டப்பிரிவு ஆண் – பெண் இருவருக்கும் சமமாக இல்லை என்பதையும், பெண்ணை ஆணுக்கு அடிமையாகக் கருதுவதையும் எதிர்த்தே பெரியார் பேசினார். தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இது ஒரு சட்ட ரீதியான சீர்திருத்தக் கருத்து.
ஆனால், சில பத்தரிகைகள், “பிறன் மனைவியை விரும்புவது குற்றமல்ல என்று பெரியார் தீர்மானம்” என மொட்டையாக வெளியிட்டன.
அப்போது தி.க. பொதுச்செயலாளராக இருந்த கி. வீரமணி, இந்த பத்திரிகைகள் மீது வழக்கு தொடுத்தார்.
பெரியார் 1971-ல் எதை வலியுறுத்தினாரோ, அதை ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை 2018-ல் இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ” இந்தியத் தண்டனைச் சட்டம் 497-வது பிரிவு, பெண்ணொ ஒரு பொருளாக, கணவனின் உடைமையாக குறிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது” என்று கூறி அதை ரத்து செய்தது.
இப்படி பெண்களுக்காக சிந்தித்த, உழைத்த, போராடிய தந்தை பெரியாரைத்தான் ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீமதி, ஏதேதோ கூறுகிறார்.
@ “குறிப்பிட்ட தீர்ப்பில்கூட ஸ்ரீமதி, “சனாதனியான மனுதாரர், வெறுப்புப் பேச்சால் பாதிக்கப்பட்டவர்; சனாதன தர்மத்தை பாதுகாத்தவர். சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசியதால், 80 சதவிகித இந்துக்கள் மனம் புண்பட்டது” என ஸ்ரீமதி கூறுகிறார். இதில் பெரும் முரண்பாடு உள்ளது.
ரங்கராஜன் நரசிம்மன் என்கிற, வைதீக அறிஞராக வெளிப்படுபவர் – திருவரங்கம் இரங்கநாதன் கோயில் நடைமுறைகள் குறித்து பல வழக்குளை தொடுத்தவர் – “நான் இந்து அல்ல.. சனாதனி. சனாதன மதத்தைச் சேர்ந்தவன்” என்கிறார்.
இதேயேதான் “சனாதனிகள்” அனைவரும் சொல்கிறார்கள். அவர்கள், ” சிந்து நதிக்கு அப்பால் இருப்பவர்களைக் குறிக்க பாரசீகர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட அந்நியர்களால் வைக்கப்பட்ட பெயர்தான் இந்து. அது ஒரு மதத்தின் பெயர் அல்ல
எங்களது கலாச்சாரம், சனாதன தர்மம் மட்டுமே. சனாதனிகள் என்று அழைப்பதே சரி இந்து என கூறாதீர்” என்கிறார்கள்.
சனாதனிகளுக்கும் இந்துக்களுக்கும் தொடர்பில்லை என்கிற போது, ஏன் இந்துக்கள் வருத்தப்பட வேண்டும்?
@ இந்து என்ற வார்த்தையும், இந்து என்கிற மதமும் வெள்ளையர் ஆட்சியில் சில நூற்றாண்டுகள் முன்பு உருவானது என்பதே வரலாறு.
இதை காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தனது தெய்வத்தின் குரலில், “வெள்ளைக்காரன் வந்து இந்து என பெயர் வைத்தானோ.. பிழைத்தோம்” என குறிப்பிட்டதில் இருந்தும் அறியலாம்.
வெள்ளைக்காரன் வந்த நேரத்தில் இங்கே நிறைய மதங்கள் இருந்தன. தமிழ்நாட்டில் சைவம், வைணவம், சாக்கியம் உள்ளிட்ட மதங்கள் இருந்ததை அறிவோம். இது போல இந்தியாவை வெள்ளையன் உருவாக்கிய போது எண்ணற்ற மதங்கள் இருந்தன. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆகவே, “கிறிஸ்தவர், யூதர், முஸ்லிம் அல்லாத அனைவரும் இந்து” என்றான். பல மதங்களை ஒன்றாக்கி ஒரே மதமாக்கினான்.
இன்றும், இந்திய இந்து திருமண சட்டத்தில் பவுத்தர், சீக்கியர், சமணர் உண்டு. ஏன்.. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையில் சமணர் வழிபாட்டுத்தலங்களும் உண்டு. இவற்றை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது உண்டு.
ஏன்.. கர்நாடகத்தில் ஒன்றரை கோடி மக்கள் உள்ள லிங்காயத்து பிரிவினர், தங்களை இந்துக்களாக சொல்வதே இல்லை. அவர்கள், “நாங்கள் மனு ஸ்மிருதி, வேதங்களை ஏற்பதில்லை. வேதங்களில் ஆடு,மாடு, குதிரை பலிகள் சொல்லப்படுகின்றன. தீயில் விலங்கை வாட்டும் போது வரும் வாசம் அருமையாக இருக்கும் என்றெல்லாம் வேதங்கள் சொல்கின்றன. பின்னாட்களில் வேண்டுமானால் அவர்கள் அசைவத்தை விட்டிருக்கலாம். நாங்கள் ஆதி சைவர்கள். நாங்கள் தனி மதம் என்கிறார்கள்.
( அதே போல, சர்னாக்கள்,சனமஹி ( மனிப்பூர்) உள்ளிட்ட பல இனத்தவர்கள் தங்களை இந்துக்களாக ஏற்பதில்லை.
இதுகுறித்து ஏற்கெனவே aramonline இதழில் நான் எழுதிய கட்டுரை: https://aramonline.in/22700/aadivasi-umang-singhar-no-hindu/)
ஆக சனாதனிகளுக்காக, “இந்துக்கள்” பொங்க வேண்டிய அவசியம் இல்லை. பொங்கவும் இல்லை.
@ ஸ்ரீமதி, “இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் பதில் மனுவில், ஆளுநரும் பாஜகவும் சனாதனம் பற்றிப் பேசும்போது, அமைச்சர் ஏன் சனாதனம் பற்றிப் பேசக் கூடாது என குறிப்பிட்டு இருக்கிறார்கள். இது அப்பட்டமான அரசியல் சாயம். இது துரதிர்ஷடவசமானது” என குறிப்பிட்டு இருக்கிறார்.
உண்மைதான். மலினமான அரசியில் எங்கு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, டெல்லி பாஜக ஐடி பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியாவின் ட்விட்தான் மூலம். அவர், “உதயநிதி பேசியது இன அழிப்பு” என்கிறார். அடுத்தவரி, ” ‘இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணியினர் அனைவரும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள்” என்றும் பதிவிட்டு இருக்கிறார்.
இதைத்தான் முதலில் ஸ்ரீமதி கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டுகொள்ளவில்லை.
( @ மூன்று வருடங்களுக்கு முன், இதே ஸ்ரீநிதி, வழக்கு ஒன்றில் கார்மா அடிப்படையில் தீர்ப்பு அளித்தார். மேல் முறையீட்டில் நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு இதை கடுமையாக கண்டித்தது.
“கர்மாவுக்கு என்று ஏதேனும் சட்ட ரீதியான விதிகள் அல்லது நடைமுறைகள் உள்ளனவா” என்று ஸ்ரீமதிக்கு கேள்வி எழுப்பிய அமர்வு, “அரசமைப்புச் சட்டம் மற்றும் வகுக்கப்பட்ட சட்ட விதிகளின் அடிப்படையிலேயே இயங்க வேண்டும். கர்மா போன்ற தத்துவார்த்த அல்லது மத ரீதியான கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்க முடியாது. சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய தர்க்கங்களை அனுமதிக்க முடியாது” என உறுதியாகக் கூறியது. ஸ்ரீமதியின் தீர்ப்பை தள்ளுபடி செய்தது.
ஸ்ரீமதிக்கு அவரது பாணியிலேயே ஒரு விசயத்தைச் சொல்வோம்.
ஏற்கெனவே கர்மா குறித்து தெரிவித்து தீர்ப்பளித்தபோது, “சஞ்சித மற்றும் பிராரப்த கர்மா” ஆகியவற்றைக் குறிப்பிட்டு இருந்தார்.
சஞ்சித கர்மா என்பது, முற்பிறவிகளில் நமது செயல்களால் சேர்ந்த பாவ, புண்ணியங்கள் .
பிராரப்த கர்மா என்பது, முற்பிறவி பாவ புண்ணியங்களால், இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் பலன்கள்
இன்னொரு கர்மாவும் உண்டு.
ஆகாமியம் : இந்த பிறவியில் நமக்கு நடக்கும் செயல்களுக்கு நாம் எப்படி எதிர்வினை புரிகிறோம் என்பது. இதுதான் அடுத்த பிறவியில் நாம் அனுபவிக்கும் பலன்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
அடுத்த பிறவி எல்லாம் இருக்கட்டும்.. இதே பிறவிலேயே நமது செயல்களே, நமக்கான பலன்களைத் தரும்.
அதைத்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கனியன் பூங்குன்றனார் கூறினார்:
“தீதும் நன்றும் பிறர் தர வாரா!”)
– டி.வி.சோமு
முகப்பு படம்: உதயநிதி, உயர் நீதிமன்றம், ஸ்ரீமதி
குறிப்பு: தினமலர் யு டியுப் சேனலில், நேரமின்மை காரணமாக தவிர்த்த கருத்துக்களை இங்கே அடைப்புக் குறிக்குள் கொடுத்து இருக்கிறேன்.

