ஆணவக் கொலை அப்பாக்களுக்கு சூடு போட்ட சாய் தன்ஷிகா!
“சினம்” – இருபது நிமிட குறும்படம்தான். ஆனால் பார்த்து பல மணி நேரம் ஆகியும் அதன் தாக்கம் மனதில் இருந்து அகலவில்லை.
படத்தில் நான்கைந்து கதாபாத்திரங்கள்தான்.
அதிலும் வசனங்களே இல்லாத அப்பாவும் ஒருவர். சில வசனங்கள் பேசும், ஆவணப்பட இயக்குனர்.
மற்றபடி தொடர்ந்து 16 நிமிடங்கள் பேசுகிறார் சாய் தன்ஷிகா. அதுதான் படம்.
உட்கார்ந்த இடத்தில் அத்தனை உணர்ச்சிகரமாக பேசி நடித்திருக்கிறார் சாய் தன்ஷிகா. நெகிழ்ச்சி, ஆதங்கம், ஆத்திரம் என நடனமாடுகிறது அவரது கண்களும், முகமும்!
பாசமான அப்பா… பாசமான மகள்…! அவள் வளர்கிறாள். தனக்குப் பிடித்தவனை திருமணம் செய்துகொள்கிறாள். அவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என, அப்பா ஆணவக்கொலை செய்து விடுகிறார்.
அப்பாவுக்கு பாடம் புகட்ட, பாலியல் தொழில் இறங்குகிறாள் மகள்.
அதோடு, “அப்பா… என்னை யார் தொட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க நினைத்தீர்கள். அதுதான் உங்கள் கவுரவம் என்றீர்கள். இப்போது இரண்டு வருடங்களாக என் உடலை யார் யாரோ தொடுகிறான். என் உடலை நினைத்தால் எனக்கே அருவெறுப்பாக இருக்கிறது. இதை உங்களுக்கு.. இந்த உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்பதால்தான், இந்த வீடியோ..” என அவர் கூறி முடிக்க.. படம் நிறைவடைகிறது…
“நம்ம ரெண்டு பேர் பேருக்கும், கடவுள் பெயரைத்தான் வச்சிருக்காங்க.. ஆனா மனித உயிராக்கூட மதிக்க மாட்டேங்கிறாங்க…”.. இப்படி கவனிக்க வைக்கும் வசனங்கள்.. மற்றும் இயக்கம்.. -ஆனந்த மூர்த்தி.
குறும்படம்தான்.. ஆனால் பேசாத பெரும் விசயத்தை துணிச்சலுடன் பேசியிருக்கிறது!