சபரி விமர்சனம்
கணவர் கணேஷ் வெங்கட்ராமனை விவாகரத்து செய்துவிட்டு தனது பெண் குழந்தையுடன் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வேலை தேடி வருகிறார் வரலட்சுமி சரத்குமார். அவரிடம் இருந்து குழந்தையை பிரிக்க அவரது முன்னாள் கணவர் கணேஷ் வெங்கட்ராமன் திட்டமிடுகிறார்.
இதற்கிடையே, கொலை குற்றவாளியான மைம் கோபி, வரலட்சுமியின் மகள் தன்னுடைய குழந்தை என்று சொந்தம் கொண்டாடுகிறார். அதோடு, அந்தக் குழந்தையை கடத்தி வைத்துக்கொண்டு வரலட்சுமியிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டும மிரட்டுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அதிரடியாக சொல்கிறது ‘சபரி’.
வரலட்சுமி சிறப்பாக நடித்து உள்ளார். கணவனை ‘அந்த கோலத்தில்’ பார்த்து அதிர்ச்சி ஆவது, உடனடியாக கணவரை பிரிவது, குழந்தை மீது கொண்டிருக்கும் பாசம், அந்த குழந்தையை காப்பாற்ற நடத்தும் போராட்டம் என சபாஷ் போட வைக்கிறார் வரலட்சுமி.
பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அதோடு ஆக்சன் காட்சிகளிலும் அசத்துகிறார்.
மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளியாக அதிர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் மைம் கோபி. ஒரே வரியில் சொன்னால் – மிரட்டி இருக்கிறார் மனிதர்.
வரலட்சுமியின் கணவராக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஷசாங்,வரலட்சுமியின் மகளாக நடித்திருக்கும் பேபி நிவேக்ஷா உள்ளிட்டோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் கேமரா மலை கிராமத்தை அழகாக கண்முன் நிறுத்தி இருக்கிறது.
கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம்.
மகள் தான் உலகம் என்று வாழும் நாயகியின் பாசப் போராட்டத்தை, த்ரில்லர் கலந்து சொல்லி இயிருக்கிறார் இயக்குநர் அனில் கட்ஸ்.
ஈர்க்கும் கதைதான் என்றாலும், திரைக்கதையில் தேவையில்லாத சில விசயங்களை திணித்து அயர்ச்சி அடையை வைக்கிறார்.
ஆனாலும், தன் குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் போராட்டத்தை அதிரடியாகவும் சொல்லியிருப்பது சிறப்பு.