சாலா: விமர்சனம்

சாலா: விமர்சனம்

வட சென்னை, ராயபுரம் பகுதியில் 1969ல் இருந்து பிரபலமானது பார்வதி பார். இதைக் கைப்பற்றுவதில் இரு தரப்புக்கு பிரச்சினை ஏற்பட… சீல் வைக்கப்படுகிறது. வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்ல.. நீண்ட காலம் கழித்து, பார் மீதான தடை விலகுகிறது. மீண்டும் இரு தரப்பும் மோத… ஒரு தரப்புக்கு பார் லைசன்ஸ் கிடைக்கிறது.

இதில் ஒரு தரப்பு கேங்ஸ்டர், அநாதை சிறுவனை வளர்க்கிறார். அந்த சிறுவன்தான் சாலா. அவன் வளர்ந்து, கேங்ஸ்டருக்கு வலதுகரமாக இருக்கிறான்.

இதற்கிடையே, மதுவை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் பள்ளி ஆசிரியை. அவர் மீது சாலாவுக்கு காதல் ஏற்படுகிறது.

இன்னொரு புறம் பார் குறித்த பிரச்சினையில் இரு கேங்ஸ்டார் தரப்பும் கடுமையாக மோதுகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

சாலாவாக வருகிறார் அறிமுக நாயகன் தீரன். பெயருக்கேற்ற தீரன்தான். ஆஜானுபாகுவான உடல்வாகு, சண்டைக் காட்சிகளில் அசரடிக்கும் வேகம் என, தான் சூரன்தான் என்பதை வெளிப்படுத்துகிறார் நாயகன் தீரன்.

சொல்லப்போனால் இவரும் வில்லன்தான்.. என்னவொன்று, ‘நல்ல’ வில்லன். ஒரிஜினல் சரக்கு மட்டும் விற்பவர். ஆனால் தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான ஆத்திரம், ஆக்ரேசத்தை வெளிப்படுத்தி கவர்கிறார்.

அதே போல, மலர் டீச்சர் மீதான காதல், அவரது முடிவு தெரிந்தவுடன் கதறுவது, அண்ணனாக நினைப்பவர் மீது காட்டு்ம் பாசம் என்று இதர பீலிங்குகளிலும் ஸ்கோர் அடிக்கிறார். பாராட்டுகள்.

சாலாவின் காட் பாதராக வருகிறார் அருள்தாஸ். எப்போதும் போல இயல்பான, அதே நேரம் அசத்தும் நடிப்பு.

அநாதை சிறுவர்கள் மீது காட்டும் பாசம், எதிர்த்தரப்பினரின் செயல்களால் வெகுண்டெழும் ஆத்திரம், இறுதியில் துடிதுடித்து உயிர்விடும் சோகம் என அசத்துகிறார் அருள்தாஸ்.

நாயகி ரேஷ்மா வெங்கடேஸ்.. மதுவை எதிர்த்துப் போராடும் சமூக ஆர்வலராக – ஆசிரியையாக – வருகிறார். பெற்றோரை இழந்த பிள்ளைகளை படிக்க வைப்பது, மதுவுக்கு எதிராக போராடுவது என உணர்ச்சிகரமாக நடித்து இருக்கிறார்.

படத்தின் (நிஜ) வில்லன், சார்லர் வினோத். போலி மதுபானம் தயாரிப்பது, சிறுவர்களை கொடூரமாக கொல்வது என மிரள வைக்கிறார்.

அவரது வலதுகரமாக வரும் யோகிராம், இன்னொரு வில்லன். செயற்கைத்தனம் இன்றி இயல்பாக நடித்து வெறுப்பை சம்பாதிக்கிறார். முகபாவம் மட்டுமின்றி, உடல் மொழியிலும் கவனத்தை ஈர்க்கிறார்.

காவல் அதிகாரி சம்பத்ராம், தனது பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். போலி மதுபானம் தயாரிப்பவர், இவருக்கு ஒரு மது பாட்டிலை கொடுக்க.. “ஒரிஜினல்தானே” என்று இவர் கேட்கும் இடத்தில் கைதட்டல் பெறுகிறார்.

தீசன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவர்கின்றன. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்துக்கு பலம்.

அரசு நடத்தும் மதுக்கடைகள், அதற்கான பாரை கைப்பற்ற தனியார்கள் போட்டி போடுவது, போலி மதுபானம்… என்று நிறைய விசயங்களைச் சொல்லி இருக்கிறது படம். மதுவின் கேட்டினை, அழுத்திச் சொல்லும் இறுதிக் காட்சி அதிர வைக்கிறது.

இயக்குநர் எஸ்.டி.மணிபாலுக்கு பாராட்டுகள்.